சென்னை மாநகராட்சியின் கரோனா தடுப்பு பணிகளுக்காக 3.50 லட்சம் மருத்துவ ஊசிகளை சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளனது.

சென்னை மாநகராட்சி சார்பில், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சை அளிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிகிச்சைக்கு தேவையான பொருட்கள், பல்வேறு நிறுவனங்களிடமிருந்து அவர்களின் சுயவிருப்பத்தின் பேரில் நன்கொடையாகவும் பெறப்பட்டு வருகின்றன. அவ்வாறு பல்வேறு நிறுவனங்கள் ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், பல்ஸ் ஆக்சி மீட்டர்கள், ஆக்சிஜன் உருளைகள் போன்றவற்றை வழங்கி வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில் பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் (CSR FUND), மாநகராட்சிக்கு முதற்கட்டமாக 30 ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து தலா 10.5 கிலோ திறன் கொண்ட 200 ஆக்சிஜன் உருளைகளையும் வழங்கின.

இதன் தொடர்ச்சியாக நிறுவனத்தின் முதுநிலை இயக்குநர் விகாஷ் மிட்டல், 3.50 லட்சம் மருத்துவ ஊசிகளை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் நேற்று முன்தினம் வழங்கினார். அப்போது மாநகராட்சி துணை ஆணையர் ஜெ.மேகநாதரெட்டி, சாம்சங் நிறுவன இயக்குநர் கண்ணன், துணைப் பொது மேலாளர் எஸ்.பி.திவாகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.