தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 6 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனும் நேற்று (ஜூன் 16) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமருகல் மருத்துவமனையில் வீடியோ காணொலி மூலம் கரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் கரோனா தொற்றுடையவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தும், பனங்குடி ஊராட்சி முட்டம் கிராமத்தில் வீடு, வீடாக சென்று கரோனா தொற்று அறிகுறிகள் தொடர்பாக கணக்கெடுப்பு பணிகளில் உள்ள முன்களப்பணியாளர்கள் மேற்கொண்டுவரும் ஆய்வுகளையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டறிந்தார்.

அதன் பின்னர் நாகப்பட்டினம் மாவட்டம் ஈசனூர் தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா
சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்றுவரும் கரோனா தொற்றுடையவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான கரோனா சிகிச்சை பிரிவினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

வேளாங்கண்ணி கரோனா தடுப்பூசி முகாமினை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறுகையில், “தமிழக முதல்வர் கரோனா பெரும் தொற்றுலிருந்து தமிழக மக்களை பாதுகாக்கும் வகையில் அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள நடவடிக்கை எடுத்துக் கொண்டு வருகிறார். அதனடிப்படையில், தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 14 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில், 1 கோடியே 6 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது” என்றார்.

பின்னர், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் துறைவாரியாக மேற்கொள்ளப்பட்டுவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைள் குறித்து, அரசு உயர் அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொண்டார்.