தமிழகத்தில் மே 20-ம் தேதி வரைஅறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலாகின்றன.

தமிழகத்தில் கரோனா வைரஸ்2-வது அலை மிகத் தீவிரமாக பரவிவருகிறது. நாள் ஒன்றுக்கு 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பரவலைத் தடுக்க இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவை விதிக்கப்பட்டன.இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று முதல்புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் வரும் 20-ம் தேதி வரை அமலில்இருக்கும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீதம் பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதில் அரசுஅலுவலகங்களில், ஒரு நாள் விட்டுஒருநாள் அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை என்ற அடிப்படையில் வருகைப்பதிவு மாற்றப்பட்டுள்ளது.

• புறநகர் ரயில், பயணிகள் ரயில்களில் 50 சதவீதம் பயணிகளை அரசு அனுமதித்த நிலையில், தற்போது இந்த ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க இயலாது. ஆனால் மெட்ரோ ரயில்களில் பொதுமக்கள் பயணிக்கலாம். அரசு, தனியார் பேருந்துகள், வாடகை வாகனங்களில் 50 சதவீதம் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

• ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 3 ஆயிரம் சதுரஅடி மற்றும்அதற்கு மேல் பரப்பு கொண்டபெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது வணிக வளாகங்களில் இயங்கும்பலசரக்கு, காய்கறி கடைகளுக்கும் அனுமதியில்லை.

• தனியாகச் செயல்படும் மளிகை,பலசரக்குகள், காய்கறி விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதியின்றி பகல் 12 மணிவரை இயங்கலாம். இவை தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது. மருந்தகங்கள், பால் விநியோக கடைகளுக்கு தடையில்லை.

• உணவகத்தில் பார்சல் சேவைக்குமட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தேநீர் கடைகள் பகல்12 மணி வரை இயங்கலாம்.

• உள் அரங்கம், திறந்தவெளிகளில் சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், இதர விழாக்களை நடத்த இயலாது.திரையரங்குகளும் மூடப்படும்.

• அழகு நிலையங்கள், ஸ்பாக்கள் இயங்க விதிக்கப்பட்டுள்ள தடை,ஊரகப் பகுதிகளில் உள்ளஅனைத்து கட்டுப்பாட்டு பகுதிகளிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

• மீன் சந்தை, மீன் கடைகள், கோழி, இறைச்சிக் கடைகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6 முதல் 12 மணிவரை செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடை நேரம் குறைப்பு

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ள சூழலிலும், டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படவில்லை. இருப்பினும் கடைகள் திறப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் மே 20-ம் தேதி வரை, காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை என 4 மணி நேரம் மட்டுமே திறக்கப்படும் என டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது.