இந்திய வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக், இலங்கை, இங்கிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டியின்போது அருவருக்கத்தக்க வகையில் பேசியதற்கு மன்னிப்புக் கோரியுள்ளார்.

வீரர் பயன்படுத்தும் பேட்டையும், பக்கத்துவீட்டுக்காரர் மனைவியையும் ஒப்பிட்டு தினேஷ் கார்த்திக் பேசிய பேச்சுக்கு சமூக வலைத்தளத்தில் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தன. தினேஷ் கார்த்திக்கின் பாலியல்ரீதியான பேச்சுக்கு அவரின் மனைவியும், தாயும் கண்டித்ததையடுத்து, மன்னிப்புக் கோரியுள்ளார்.

இங்கிலாந்து, இலங்கை இடையே நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் வர்ணனையாளராக தினேஷ் கார்த்திக் செயல்பட்டார். ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனல் சார்பில் வர்ணனையாளராக தினேஷ் கார்த்திக் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

அப்போது போட்டியின் இடையே, தினேஷ் கார்த்திக் பேசுகையில், பேட்ஸ்மேன்களின் பேட்டையும், அடுத்தவர் மனைவியையும் ஒப்பிட்டு அருவருக்கும் வகையில் பேசினார். அவர் பேசுகையில் “ பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் தங்களின் பேட்டை விரும்பவதி்ல்லை. அது அவர்களுடனே இருக்கும். ஆனால், மற்ற வீரர்கள் பயன்படுத்திய பேட்டைத்தான் பேட்ஸ்மேன்கள் அதிகமாாக விரும்புவார்கள். பேட் என்பது அடுத்தவர் மனைவி போல. அதுதான் சிறந்ததாக இருக்கும்” எனத் தெரிவி்த்தார்

தினேஷ் கார்த்திக்கின் இந்த அருவருக்கும் வகையிலான பேச்சுக்கும், பெண்களை பேட்டுக்கு இணையாக மோசமாக ஒப்பிட்டுப் பேசியதற்கும் சமூக வலைத்தளத்தில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது, எதிர்ப்பும் எழுந்தது. பெண்கள் குறித்து தினேஷ் கார்த்திக் பேசியதற்கு மன்னிப்புக் கோர வேண்டும் என்று ெநட்டிஸன்கள் பலர் வலியுறுத்தினர்.

இதையடுத்து, இலங்கை, இங்கிலாந்து இடையிலான 3-வது ஒருநாள் போட்டியின்போது, வர்ணனையாளர் பணியின்போது, தினேஷ் கார்த்திக், தனது முந்தைய அருவருக்கும் பேச்சுக்கு வெளிப்படையாக மன்னிப்புக் கோரினார்.

அப்போது தினேஷ் கார்த்திக் கூறுகையில் “ கடந்த 2-வது ஒருநாள் ஆட்டத்தில் நான் பேசிய பேச்சுக்கு இப்போது அனைவரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். உண்மையில் எந்த உள்நோக்கத்துடன் அதைபேசவில்லை.

ஆனால், அவ்வாறு பேசியதும் தவறுதான். ஒவ்வொருவரிடமும் இதற்காக மன்னிப்புக் கோருகிறேன். நிச்சயமாக அந்த வார்த்தை சரியானது அல்ல. இதுபோல் மறுபடியும் நடக்கக்கூடாது என்பதற்காக மன்னிப்புக் கோருகிறேன். நான் பேசிய வார்த்தைக்கு என் மனைவியும் தாயும் எதிர்ப்புத் தெரிவித்துக் கண்டித்தனர்” எனத் தெரிவி்த்தார்