நடப்பாண்டுக்கான நீட் தேர்வுநாடு முழுவதும் கடந்த 17-ம் தேதிநடத்தப்பட்டது. மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற இந்தத் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்து 162 கேள்விகள்இடம் பெற்றுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய 3 பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு பிரிவில் இருந்தும் தலா 50 கேள்விகள் வீதம் மொத்தம் 200 வினாக்கள் இடம்பெறும். அவற்றில் மாணவர்கள் 180 கேள்விகளுக்கு பதிலளித்தால் போதுமானது. எஞ்சிய 20 வினாக்கள் சுயவிருப்பத்துக்கான கூடுதல் வாய்ப்புகளாக வழங்கப்படும்.

அதன்படி நடப்பாண்டுக்கான தேர்வில் இடம்பெற்ற 200 கேள்விகளில் 162 கேள்விகள் தமிழக பாடத்திட்டத்தில் இருந்தும், 38 கேள்விகள் மற்ற பாடத்திட்டங்களில் இருந்தும் கேட்கப்பட்டுள்ளன.

அதாவது, வேதியியல் பாடத்தில் 40, இயற்பியலில் 48, உயிரியலில் 74 கேள்விகள் தமிழகப் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் இருந்து இடம் பெற்றுள்ளன.

எனவே, நமது பாடத்திட்டத்தில் 11, 12-ம் வகுப்புபாடநூல்களை நன்றாகப் படித்தவர்கள் நீட் தேர்வை சிறப்பாக எதிர்கொண்டிருக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இத்தகைய போட்டித் தேர்வுகளை மனதில் வைத்துதான் 2018-ம் ஆண்டு தமிழகத்தில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.