அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கூடவே பனிப்புயலும் மக்களை வாட்டி வதைக்கிறது. மிகக் கடுமையாக வீசும் இந்தப் பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை கொண்டாட திட்டமிட்டிருந்த மக்கள் பலரும் தங்களின் வீடுகளிலேயே முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பனிப்பொழிவு, பனிப்புயல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் கணிப்பு: இந்நிலையில் வானிலை ஆய்வாளர்கள் கடந்த ஐந்து நாட்களாக கடுமையாக வாட்டிவதைத்து வந்த பனிப்பொழிவும், பனிப்புயலும் படிப்படியாகக் குறையும் என்று கணித்துள்ளனர். இது மக்களுக்கு சற்றே ஆறுதல் தரும் தகவலாக அமைந்துள்ளது. அமெரிக்காவைப் போல் கனடா நாட்டிலும் பனிப்புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கனடாவின் கிரேட்டர் லேக்ஸ் தொடங்கி, மெக்சிகோவின் ரியோ க்ராண்ட் பகுதி வரை பாதிப்பு உள்ளது.

60 சதவீத மக்கள் பாதிப்பு: இந்தப் பனிப்பொழிவால் அமெரிக்காவின் 60 சதவீத மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அத்தியாவசியப் பணிகள் கூட முடங்கியுள்ளன. நியூயார்க் நகரின் பஃபலோ பகுதி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகர மேயர் கேத்தி ஹோச்சல், வரும் செவ்வாய்வரை விமான நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இப்போதைக்கு அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் மணிக்கு 40 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது. இதனால் தெருவெங்கும் பனிக்கட்டிகள் குவிந்து போக்குவரத்து சிரமமாகியுள்ளது. 4 முதல் 6 அடி உயரத்திற்கு பனி தேங்கியுள்ளது. அமெரிக்காவின் 48 மாகாணங்களில் மைனஸ் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை பனிப்பொழிவு, பனிப்புயல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.