அதிமுக தலைமையை மாற்றினால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி தெரிவித்தார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தி சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:

மதுரையில் தேர்தல் பிரச்சாரத்தின்போது எம்ஜிஆர் போல வேடம் அணிந்த ஒருவர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியின் காலில் விழுந்துள்ளார். அவர் மீது தவறு இல்லை. ஆனால், மேடையில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் யாராவது அந்த நபரை தடுத்திருக்கலாம். பழனிசாமியோ எம்ஜிஆரே காலில் விழுந்துவிட்டதாக மகிழ்ச்சி கொள்கிறார். இது எம்ஜிஆரை அவமானப்படுத்தும் செயலாகும்.

ஏற்கெனவே 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக 90 சதவீதம் தோல்வியடைந்துவிட்டது. அதை கருத்தில் கொண்டு, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குறுதிகள் குறித்து பேசாமல், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்று பழனிசாமி பேசி வருகிறார். அந்த திட்டத்தை ஒருபோதும் கொண்டு வரமுடியாது.

‘கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பழனிசாமி ஏன் இன்னும் விசாரிக்கப்படவில்லை, லஞ்ச ஒழிப்புத் துறையால் முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டும் அவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை’ என்றுதான் மக்கள் திமுக அரசின் மீது அதிருப்தியில் உள்ளனர். மற்றபடி திமுக அரசை குறை சொல்ல முடியாது.

ஸ்டாலின் கைப்பற்றுவார்

மேற்கு வங்கம் போல தமிழகசட்டப்பேரவையை ஆளுநர் முடக்குவார் என்று பழனிசாமி பேசுகிறார். ஆளுநர் எப்போது அவரிடம் அவ்வாறு கூறினார்? மேற்கு வங்கத்தில் மம்தாவை போலவே அனைத்து உள்ளாட்சிகளையும் ஸ்டாலின் கைப்பற்றுவார்.

இதற்கு ஓபிஎஸ், பழனிசாமி தலைமைதான் காரணம். ‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு மட்டுமே பாஜகவுடன் கூட்டணி இல்லை. தேர்தலுக்கு பிறகு கூட்டணி தொடரும்’ என்று தெரிவித்துள்ளனர். இப்படி இருந்தால் அதிமுகவுக்கு எப்படி வாக்கு கிடைக்கும். அதிமுக தலைமையை மாற்றினால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.