ஓபிஎஸ் அல்லது சசிகலாவின் தலைமையின்கீழ் அதிமுக வராவிட்டால், அக்கட்சி அழிவை சந்திக்கநேரிடும் என நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான வா.புகழேந்தி தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் செய்தித் தொடர்பாளராக பதவிவகித்த பெங்களூரு வா.புகழேந்தி, கடந்த ஜூன்மாதம் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதுதொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரான பழனிசாமியும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள காரணம், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி இருவருக்கும் எதிராக குற்றவியல் அவதூறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி வா.புகழேந்தி சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் நேரில் ஆஜராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி ஆகிய இருவருக்கும் விலக்கு அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி என்.அலிசியாமுன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது புகார்தாரரான வா.புகழேந்தி மட்டும் ஆஜராகியிருந்தார். அதையடுத்து நீதிபதி இந்த வழக்கு விசாரணையை வரும் நவ.24-க்கு தள்ளி வைத்துள்ளார்.

பின்னர் வா.புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக மீண்டும் எழுச்சிபெற அனைவரும் வி.கே.சசிகலாவுடன் ஓரணியில் பயணிக்க வேண்டும். அதற்கு பழனிசாமியை அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை மதுரை விமான நிலையத்துக்கு வைக்க அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோன்ற காரணங்களால் தென்மாவட்ட மக்கள் அதிமுக மீது வெறுப்புணர்ச்சியுடன் உள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அடைந்த படுதோல்விக்கும் பழனிசாமிதான் முழு காரணம். தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின், மருது சகோதரர்களுக்கு சிலை அமைக்கப்படும் என அறிவித்துள்ளதை பாராட்டுகிறேன். தற்போதைய திமுக அரசு மதுரைவிமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் இப்போதுதான் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறார். கட்சிக்குள் எந்த நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும் அதற்கு முழு அதிகாரமும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மட்டுமே உள்ளது.

கட்சிக்கு கடைநிலையில் இருப்பவர்கள் எல்லாம்இப்போது அதிமுகவின் தலைமையாக செயல்படுகின்ற ஓ.பன்னீர்செல்வத்தைப் பற்றி பேசுவது கண்டனத்துக்குரியது. அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும். அதற்கு சசிகலா அதிமுகவில் ஒன்றிணைய வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் அல்லது சசிகலா ஆகிய இருவரில் ஒருவரது தலைமையின்கீழ்அதிமுக வராவிட்டால் அதிமுக அழிவை சந்திக்க நேரிடும். தேசிய கட்சிகள் இங்கு வளர்ந்துவிடும்.