இந்திய ஆட்சிப் பணி உள்ளிட்ட அகில இந்தியப் பணிகளில், மாற்றிடப் பணி குறித்த விதிமுறைகளில் மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்திருக்கும் மாற்றத்துக்கு, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநில அரசுகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இப்பணிகளைப் பொறுத்தவரை, மத்திய அரசே அதிகாரிகளை நியமிக்கவும் வெவ்வேறு மாநிலங்களில் பணியமர்த்தவும் செய்கிறது.

மத்திய அரசிலும் மாநில அரசுகளிலும் முக்கியமான நிர்வாகப் பொறுப்புகளை அவர்களே ஏற்கிறார்கள். மத்திய அரசுக்காக ஒதுக்கப்பட்ட அகில இந்தியப் பணியிடங்களில், மத்திய மாற்றிடப் பணிகளின் எண்ணிக்கை 40%-ஐக் காட்டிலும் அதிகமாக இருக்கக் கூடாது என்ற விதிமுறை கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும் பணிபுரிந்துவரும் அகில இந்தியப் பணி அதிகாரிகளை மத்தியப் பணிக்கு அழைப்பதற்கு ஏதுவாக விதிமுறைகளில் திருத்தங்களைச் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இத்திருத்தத்துக்கான முக்கியக் காரணம், இணைச் செயலர் நிலையில் மத்திய அரசில் மாற்றிடப் பணிக்கு வரக் கூடியவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டு இருப்பதும், மாநில அரசுகள் அங்கு பணிபுரியும் அகில இந்தியப் பணி அதிகாரிகளைப் போதிய விகிதாச்சாரத்தில் மத்தியப் பணிக்கு அனுப்பிவைக்காததுமே ஆகும். மத்திய அரசுப் பணியில் பணியாற்றும் அகில இந்தியப் பணி அதிகாரிகளின் விகிதம் தற்போது 18% என்ற அளவுக்குக் குறைந்துவிட்டது. நிர்வாகத் துறையில் அனுபவம் பெற்ற அதிகாரிகளின் எண்ணிக்கை இப்படியே குறைந்துகொண்டே வந்தால், அது மத்திய அரசின் பணிகளைப் பாதிக்கும்.

மேலும், மாநிலங்களில் பணியாற்றிய அனுபவங்கள், மத்திய பணிக்குச் செல்லும்போது அரசின் கொள்கைகளை வகுக்கவும் திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் உதவியாக இருக்க முடியும். விதிமுறை மாற்றங்களுக்கான காரணங்களை இவ்வாறு மத்திய அரசு தெளிவுபடுத்தினாலும்கூடச் சில மாநில அரசுகள் இது தங்களது தன்னாட்சிக்கு விடுக்கப்பட்ட மற்றுமொரு சவாலாகவே கருதுகின்றன. ஏற்கெனவே, அதிகாரிகளின் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லாத நிலையில் மத்தியப் பணிக்கு அதிகாரிகளை எப்படி அனுப்ப முடியும் என்ற கேள்வியையும் அவை எழுப்புகின்றன.

அகில இந்தியப் பணிகளில் பணியாற்றும் அதிகாரிகளோ மத்திய அரசோ, மாநில அரசோ தாங்கள் பணியாற்ற வேண்டியது எது என்பதைத் தங்களது விருப்பப்படியே முடிவுசெய்துகொள்ள விரும்புகிறார்கள். மாநில அரசில் உயர்பொறுப்புகளை வகிக்க வாய்ப்பிருக்கும் சூழலில், மத்திய அரசின் பணிகளை அவர்கள் விரும்புவதில்லை. மாநிலத்தில் ஆளுங்கட்சியுடன் முரண்பாடுகள் எழுந்தால், மத்திய அரசுப் பணியைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அவர்களுக்கு எப்போதுமே இருக்கிறது.

மாநில அரசின் அதிகாரிகளுக்கு அளிக்கப்படாத பணிப் பாதுகாப்பும் அரசமைப்பின் வழியாக அவர்களுக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் பணிபுரியும் அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு அழைப்பது, மாநில அரசின் முழுமையான ஒப்புதலோடு நடக்க வேண்டும் என்பதே கூட்டாட்சி முறைக்கு நல்லது. கருத்தொருமித்த அந்த முடிவுகளுக்கு அதிகாரிகளும் கட்டுப்பட வேண்டும். இந்தியாவில் நடந்துகொண்டிருப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதானேயொழிய அதிகாரிகளின் ஆட்சியல்ல.