அதிமுகவை சீண்டினால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, வட சென்னை மாவட்டம் சார்பில் உட்கட்சித் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் விநியோகம் நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அதிமுக வட சென்னை மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும். ஆனால், வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அதிமுக மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதலேயே திமுக அரசு குறியாக உள்ளது.

அதிமுக ஆட்சியில் மக்களுக்கு வாக்குறுதி அளித்தபடி, தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தினோம். அதேநேரத்தில், அரசு ஊழியர்களுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆனால், தற்போதைய திமுக அரசு, ஊழியர்களுக்கு அகவிலைப்படிகூட இதுவரை வழங்கவில்லை.

பொருளாதார நிபுணர்குழு

பொருளாதார நிபுணர்களை நியமித்து 8 மாதங்களாகிவிட்டன. இதுவரை அவர்கள் சரியான யோசனை எதுவும் தெரிவிக்கவில்லை. மக்களுக்கு எந்தவிதமான உதவியும் செய்யாமல், விளம்பரங்கள் செய்வதில் மட்டுமே முதன்மையாக உள்ளனர்.அரசு நிகழ்ச்சியில்தான் முதல்வர் ஸ்டாலினை, தமிழக ஆளுநர் பாராட்டிப் பேசியுள்ளார். இதை பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

அதிமுகவினர் மீது தொடர்ந்து பொய் வழக்கு போடப்பட்டு வருகிறது. மேலும், ஆங்காங்கே கட்சியினர் மீது தாக்குதலும் நடைபெற்று வருகிறது. இதை காவல் துறை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. இனியும் அதிமுகவைச் சீண்டினால், அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும்.

நாம் தமிழர் கட்சிக் கூட்டத்தில், திமுகவினர் மேடை ஏறி தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.