பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள், போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவை சேர்ந்தவரை சென்னையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.

கடந்த மார்ச் மாதம் லட்சத்தீவுகள் அருகே ஒரு படகை இந்தியகடலோரக் காவல் படையினர் சோதனை செய்து, துப்பாக்கிகள், தோட்டாக்கள், 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். படகில்இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கையை சேர்ந்த அவர்கள், பாகிஸ்தானில் இருந்து இவற்றை இலங்கைக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது.

இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில்,விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. கடத்தலில் தொடர்பு உடையவரும், புலிகள் அமைப்பை சேர்ந்தவருமான சத்குணம் (எ) சபேசன் என்பவர் சென்னை வளசரவாக்கத்தில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. அவரை என்ஐஏ அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவுகைது செய்தனர்.

புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்கு உரிய நபராக இருந்தவர் சத்குணம். புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவை சேர்ந்தவர். 15 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு10 ஆண்டுகள் சிறையில் இருந்தார். வெளியே வந்ததும் சர்வதேச ஆயுதங்கள், போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள், போதைப் பொருட்கள் கடத்துவதில் அவர் ஈடுபடுவதாக என்ஐஏக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் தீவிரமாக கண்காணித்ததில், அவர் ஆயுதங்களை விற்பனை செய்து,அதன்மூலம் கிடைக்கும் தொகையை புலிகள் இயக்க நிர்வாகிகளுக்கு வழங்கி, விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இவ்வாறு புலிகள் இயக்க முன்னாள் வீரர்களுக்கு பெரும் தொகையை அவர் வழங்கியதும் விசாரணையில் உறுதியாகியுள்ளது. அவர் தங்கியிருந்த வளசரவாக்கம், ஐயப்பன்தாங்கல் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், சமீபகாலமாக தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்பியது தொடர்பான ஆவணங்கள், பல முக்கிய பொருட்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.