சட்டப்பேரவை நிகழ்வைப் பார்க்க வந்த அரசுப் பள்ளி மாணவிகளிடம் பேரவைத் தலைவர், அமைச்சர் உரையாடியப்போது, அங்கு வந்த பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ, “ரெஸ்டோபார் அதிகளவு திறப்பால் குடும்பங்கள் பாதிக்கப்படுவதை பற்றி கேளுங்கள்” என அறிவுறுத்தினார்.

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு தினமும் அரசு பள்ளி மாணவி, மாணவிகள் பத்து பேர் வந்து சட்டப்பேரவை நிகழ்வுகளை பார்க்கின்றனர். இன்று புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் அறைக்கு மாணவிகளுடன் அமைச்சர் சந்திர பிரியங்கா, ஆட்சியர் மணிகண்டன் ஆகியோர் சென்று உரையாடினர்.

“ஆசிரியர் போலவா நீங்கள்” என்று மாணவிகள் கேட்டனர், அதற்கு பேரவைத் தலைவர், “எம்எல்ஏக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வாங்கி தருவது பொறுமை. எம்எல்ஏவாக தேர்வாகிதான் பேரவைத் தலைவரானேன்” என்றார். அமைச்சர் சந்திர பிரியங்கா, “வீட்டில் கஷ்டமாக இருந்தாலும் அதிலிருந்து மீள திட்டங்களைப் பயன்படுத்தி படிக்கவேண்டும். பெண்களுக்கு படிப்பு முக்கியம். திருமணம் வாழ்வின் ஒரு பகுதிதான். நமக்கு படிப்பும், லட்சியமும் முக்கியம். அதை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்” என்றார்.

பேரவை நிகழ்வுகள் பற்றி பலரும் கேள்வி எழுப்பினர். அதற்கு விளக்கமும் பேரவைத் தலைவர் குறிப்பிட்டார். “நீங்கள் நாளை ஆட்சியர், அமைச்சர் என முக்கியப் பொறுப்புக்கு வரலாம். ஹெல்மெட் போடாததால் உயிரிழப்பு நிகழ்கிறது. வீட்டில் அனைவரும் ஹெல்மெட் போடச் சொல்லுங்கள்” என்றார்.

அப்போது அங்கு வந்த பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ அங்காளன், “ரெஸ்டோபார் அதிகளவில் திறப்பால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது.. அதை குறைக்கவும் சொல்லுங்கள். வீட்டில் அப்பா நன்றாக குடும்பம் நடத்த மதுக்கடைகளை குறைக்கவும் சொல்லுங்கள்” என்று மாணவிகளிடம் குறிப்பிட்டார்.

அங்கிருந்த அமைச்சர் சந்திர பிரியங்காவும் உங்கள் கோரிக்கைகளை சொல்லுங்கள் என்றார். மாணவிகள் தயக்கத்துடன் பல கேள்விகள் கேட்டனர். அதையடுத்து “அரசு பள்ளிகளில் சீருடை தராததையும் கேளுங்கள்” என்றும் எம்எல்ஏ அங்காளன் அறிவுறுத்தியப்படி இருந்தார். சிறிது நேரத்துக்கு பிறகு மாணவிகளுடன் அமைச்சர், அதிகாரிகள் புறப்பட்டனர்.