பூஸ்டர் டோஸ்களால் மட்டுமே கரோனா பெருந்தொற்றை உலக நாடுகள் ஒழித்துவிட முடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி விநியோகத்தில் சமநிலையை உறுதிப்படுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உலகின் ஒருசில பகுதிகளில் மட்டும் தடுப்பூசி திட்டம் சரிவர செயல்படுத்தப்படாமல் அங்கு கரோனா பரவல் தொடர்ந்தால் அது புதுப்புது உருமாற்றங்களுக்கே வழிவகுக்கும் என ஹூ நீண்ட நாளாக எச்சரித்து வருகிறது.

இந்நிலையில் டெட்ராஸ் அதோனம் அளித்தப் பேட்டியில், உலக நாடுகள் பூஸ்டர் தடுப்பூசித் திட்டத்தில் அதிக ஆர்வம் காட்டுவது கரோனா பெருந்தொற்று காலத்தை நீட்டிக்குமே தவிர முடிவுக்குக் கொண்டு வராது. பூஸ்டரில் கவனம் செலுத்துவதைவிட எந்தப் பகுதிகளில் தடுப்பூசி சரியாக விநியோகிக்கப்படவில்லையோ அங்கே தடுப்பூசி திட்டத்தை வேகப்படுத்தலாம். தடுப்பூசி செலுத்தப்படாத பகுதிகள் தான் கரோனா உருமாறும் களமாக உள்ளன.

உலக நாடுகள் அனைத்திலும் 40% மக்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வரை மேலை நாடுகள் பூஸ்டர் தடுப்பூசித் திட்டத்தை நிறுத்திவைக்கலாம்.

ஐ.நா. புள்ளிவிவரத்தின்படி அதிக வருவாய் கொண்ட நாடுகளில் 67% பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்திக் கொண்டுள்ளனர். அதேவேளையில் குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் 10% பேர் கூட முழுமையாக தடுப்பூசி டெலுத்திக் கொள்ளவில்லை. ஆப்பிரிக்காவில் 4ல் மூன்று சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை. இந்தத் தடுப்பூசி ஏற்றத்தாழ்வை சீரமைக்க வேண்டும் என்று டெட்ரோஸ் வலியுறுத்தியுள்ளார். அதேபோல் பூஸ்டர் டோஸ் அதிகமாக செலுத்தப்பட்டுவிட்டதால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை, கூட்டங்களை அனுமதிக்கலாம் என்று அர்த்தமாகிவிடாது என்றும் உலக நாடுகளுக்கு அவர் எச்சரித்துள்ளார்.

106 நாடுகளில் ஒமைக்ரான்:
கடந்த நவம்பர் 26ல் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் இப்போது 106 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 236 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சைப் பெற்றவர்களில் 104 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவிலும் பூஸ்டர் டோஸ்களை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. டெல்லியில் பூஸ்டர் தடுப்பூசிக்கு அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அனுமதி கோரியுள்ளார்.