கலிபோர்னியா: கலிபோர்னியா துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்ட்டி ஷெரீட் ராபர்ட் லூனா கூறுகையில், “நிகழ்விடத்திலிருந்து சற்று தொலைவில் ஒரு சந்தேகத்துக்கு இடமான வேன் நின்றது. அந்த வேனை நாங்கள் சுற்றிவளைக்க முற்பட்டோம். அப்போது அந்த வேனிலிருந்து துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டது. வேனை திறந்து பார்த்தபோது அங்கு ஒரு நபர் இறந்து கிடந்தார். அவர் 72 வயதான ஹூ கான் ட்ரான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் தான் கார்வே அவென்யூவில் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்க வேண்டும் என்று நம்புகிறோம். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னணி என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை. இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது” என்றார்.

நடந்தது என்ன? அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே மாண்ட்ரே பார்க் நகரம் அமைந்துள்ளது. அங்கு கார்வே அவென்யூ பகுதியில் செங் வான் சோய் என்ற சீன வம்சாவளி தொழிலதிபருக்கு சொந்தமான ஓட்டல் செயல்படுகிறது.

அந்த ஓட்டலில் நேற்று இரவு சீன புத்தாண்டு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில் 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது மர்ம நபர் ஒருவர், அதிநவீன துப்பாக்கியுடன் ஓட்டலில் நுழைந்து கண் மூடித்தனமாக சுட்டார். இதில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே 11 கி.மீ. தொலைவில் மாண்ட்ரே பார்க் அமைந்துள்ளது. நகரில் 61,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் 65 சதவீதம் பேர் சீன வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் ஆண்டுதோறும் சீன புத்தாண்டு மாண்ட்ரே நகரில் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டும் நகரின் அனைத்து ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் சீன புத்தாண்டு உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதில் கார்வே அவென்யூ பகுதி ஓட்டலில் இனவெறியின் காரணமாக சீனர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. கடந்தாண்டு சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதும் மாண்ட்ரே பார்க் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.