கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து சட்டப்பேரவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக உறுப்பினர் நந்தகுமார், கடந்த ஆட்சியில் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததே சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிற்கு காரணம் என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பியதால்தான் வெள்ளம் ஏற்பட்டதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய திமுக உறுப்பினர் நந்தகுமார், உரிய நேரத்தில் திறந்து விடப்படாததால், செம்பரம்பாக்கம் ஏரி உடைந்து நீர் வெளியேறியதாக தெரிவித்தார். செம்பரம்பாக்கம் ஏரி உடையவில்லை எனவும், அணை நிரம்பியதால் உபரிநீர் மட்டுமே வெளியேற்றப்பட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.

அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் உறுப்பினர் செல்வ பெருந்தகை, செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க முதலமைச்சர் உத்தரவுக்காக 4 நாட்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் காத்திருந்தனர் எனவும், ஏரியிலிருந்து ஒரே நாளில் அதிகளவு நீர் வெளியேற்றப்பட்டதாகவும் கூறினார்.

இதற்கு விளக்கம் அளித்த எடப்பாடி பழனிசாமி, மழைக்காலங்களில் அணைகள் மற்றும் ஆறுகள் நிரம்புவது வழக்கம்தான் என தெரிவித்தார். மேலும், பாசனத்திற்காக அணைகளிலிருந்து நீர் திறக்கும் போது மட்டும்தான் முதலமைச்சரின் அனுமதி தேவை என தெரிவித்த அவர், மழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் அணை நிரம்பும் போது தண்ணீரை திறப்பது குறித்து அதிகாரிகளே முடிவு எடுக்கலாம் எனவும் கூறினார்.