திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின், ‘உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி’ என்றபெயரில் காணொலி வாயிலாக பிப்.6 (நாளை) முதல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் பிப்.19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, நேற்றுடன் வேட்புமனு தாக்கலும் நிறைவடைந்துள்ளது.

எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் அதன் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, தமிழகத்தில்பல்வேறு மாநகராட்சிகளில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின், காணொலி வாயிலாக மாவட்டங்களில் ‘உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி’ என்றபெயரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

நாளை பிப்.6-ம் தேதி கோவையிலும், 7-ம் தேதி சேலம், 8-ம்தேதி கடலூர், 9-ம் தேதி தூத்துக்குடி, 10-ம் தேதி ஈரோடு, 11-ம் தேதி கன்னியாகுமரி, 12-ம் தேதி திருப்பூர், 13-ம் தேதி திண்டுக்கல், 14-ம் தேதி மதுரை, 15-ம் தேதி தஞ்சை, 17-ம் தேதி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் காணொலி வாயிலாக பிரச்சாரம் மேற்கொள்கிறார். இத்தகவலை திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது.