சென்னை மாநகராட்சியில் 8 ஆயிரம் தூய்மைப் பணியாளர்கள் கரோனா தடுப்பூசி போடவில்லை என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வீடுகளில் தனிமையில் உள்ள கரோனா நோயாளிகளால் உருவாகும் உயிரி மருத்துவக் கழிவுகள் அறிவியல் முறையில் அகற்றப்படுவதில்லை. பெரும்பாலானோர் பிற கழிவுகளுடன் சேர்த்து மருத்துவக் கழிவுகளை போடுகின்றனர். இந்த குப்பைகளை சேகரிக்கும் தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு தொற்றுகளால் பாதிக்கப்படுகின்றனர் என்ற செய்தி இணையதளம் மற்றும் நாளிதழில் வெளியானது. அதை அடிப்படையாக கொண்டு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி ஆகியவை தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அமர்வின் உறுப்பினர்கள் கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சி தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வீடுகளில் தனிமையில் உள்ள கரோனா நோயாளிகளின் உயிரி மருத்துவக் கழிவுகள் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விதிகளின்படி அழிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை தூய்மைப் பணியாளர்களுக்கு 77 லட்சத்து 62 ஆயிரத்து 526 மூன்றடுக்கு முகக்கவசங்கள், 4 லட்சத்து 5 ஆயிரத்து 950 பருத்தி கையுறைகள் வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் மொத்தமுள்ள 19,715 தூய்மைப் பணியாளர்களில் 11,692 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவர்களை பரிசோதிக்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகின்றன.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

8,023 தூய்மைப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடாமல் இருப்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “பணியாளர்களிடையே உள்ள அச்சம், தடுப்பூசி பற்றாக்குறை போன்ற காரணங்களால் அவர்களுக்கு தடுப்பூசி போடவில்லை. தற்போது அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி போட்டு வருகிறோம்” என்றனர்.