திருப்பூர்: நூல் விலை உயர்வை கட்டுப் படுத்த வலியுறுத்தி, நாளை (மே 22) முதல் ஜூன் 5-ம் தேதி வரை உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்துவதாக, கோவை, திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 லட்சம் விசைத்தறிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பின்னலாடை தயாரிப்புக்கு தேவையான மிக முக்கிய மூலப்பொருளான நூலின் விலை கடந்தசில மாதங்களாக உயர்ந்து வருவதால், அதனை சார்ந்து இயங்கும் ஜாப் ஒர்க் உட்பட பல்வேறு தொழில்துறையினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை, திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம், திருப்பூரைஅடுத்த மங்கலத்தில் நேற்று நடைபெற்றது. திருப்பூர், பல்லடம், சோமனூர், அவிநாசி, மங்கலம், தெக்கலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்றனர்.

இதுதொடர்பாக, கோவை, திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நூல் விலை உயர்வால் கடந்த 2 நாட்கள் நடந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றோம். நூல் விலை உயர்வுக்கேற்ப துணிகளின் விலையை உயர்த்த முடிவதில்லை. எனவே, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரியும், பஞ்சு ஏற்றுமதி மற்றும் நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்கக் கோரியும் மே 22 முதல் ஜூன் 5-ம் தேதி வரை 15 நாட்கள் முழுமையாக உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.

இந்த வேலைநிறுத்தத்தால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் இயங்காத நிலை ஏற்படும். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுவர்.

மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க வேறு வழியின்றி இந்தப் போராட்டத்தில் ஈடுபடஉள்ளோம்.

இதனால், நாளொன்றுக்கு ரூ.100 கோடி வரை வர்த்தகம் பாதிக்கும். பருத்தி நூலை தவிர்த்துசெயற்கை இழையிலான நூல்களைபயன்படுத்துவது குறித்த ஆலோசனையையும் மேற்கொண்டு வருகிறோம். உற்பத்தி நிறுத்த காலத்தில் மத்திய, மாநில அரசுகளிடம் எங்களது கோரிக்கைகளை வலியுறுத்துவோம்” என்றார்.