புதுச்சேரி நோணாங்குப்பத்தை சேர்ந்தவர் வசந்தி(37) . திருநங்கை. இவர் அரியாங்குப்பம் பாலம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த 3 காவலர்கள் தகாத முறையில் நடந்ததாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். இதனை அறிந்த 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் புதுச்சேரி கடற்கரை சாலை அருகில் உள்ள டிஜிபி அலுவலகம் முன்பு நேற்று ஒன்று கூடினர். தகாத முறையில் நடந்து கொண்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

போலீஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தகவலறிந்த சீனியர் எஸ்பி நாராசைதன்யா திருநங்கை களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தினார். போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என உறுதியளித்தார். இதையடுத்து அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

பின்னர் இது குறித்து தெற்கு பகுதி எஸ்பி ரவிக் குமாரிடம் புகார் மனு அளித்தனர். அதனை பெற்றுக் கொண்ட அவர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இது தொடர்பாக எஸ்பி ரவிக்குமாரிடம் கேட்டபோது, ‘‘விசாரணை நடந்து வருகிறது. அதன் பிறகே உண்மை தெரியவரும்’’ என்றார்.