கொரோன நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு முறை தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் இல்லாமல் கேரளாவில் இருந்து வருபவர்களை தமிழகத்துக்குள்அனுமதிக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் படிப்படியாக குறைந்த கரோனா பாதிப்பு, கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, கோவை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

20 ஆயிரத்தை கடந்த தொற்று

இதற்கிடையே, அண்டை மாநிலமான கேரளாவில் தினசரி தொற்றுபாதிப்பு 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதையடுத்து, கேரளத்திலிருந்து தமிழகம் வருவோரை மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அடுத்தபடியாக இன்று (ஆகஸ்ட் 5) முதல் கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு கரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் நிலவும் சூழலின்அடிப்படையில், கரோனா வழிகாட்டி நெறிமுறைகள், பரிசோதனை நடவடிக்கைகள், நோயாளிகளைத் தனிமைப்படுத்துவதற்கான வழிமுறைகள், சிகிச்சை மற்றும் வீட்டுக்கு அனுப்புவதற்கான வழிகாட்டுதல்களை மாநில அரசு திருத்தி அமைத்துள்ளது.

அந்த அடிப்படையில், ஆகஸ்ட் 5-ம் தேதி முதல், அண்டை மாநிலமான கேரளத்தில் இருந்து தமிழகம் வருபவர்கள் 72 மணி நேரத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவுகளையோ (தொற்று இல்லை என்பதற்கான கரோனா நெகட்டிவ் சான்று) அல்லது இரண்டு முறை கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டற்தான சான்றிதழையோ காட்ட வேண்டும். அத்தகைய சான்றுகள் இல்லாமல் எவரையும் தமிழக எல்லைக்குள் அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Metro_People #Corona #TamilNadu #Chennai #tamilNews #NewsUpdates #Todaynews