தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே தேர் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அரசு அறிவித்த நிவாரண நிதிக்கான காசோலையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று நேரில் வழங்கி ஆறுதல் கூறியுள்ளார்.

பாப்பாரப்பட்டி அடுத்த மாதேஅள்ளி கிராமத்தில் நேற்று (திங்கள்கிழமை) காளியம்மன் கோயில் நடைபெற்றது. விழாவின்போது அச்சு கழன்று தேர் சரிந்து விழுந்தது. இந்த தேரின் கீழே சிக்கி மனோகரன், சரவணன் ஆகிய இருவர் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த நிலையில், இன்று காலை தமிழக உழவர் நலன் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தேர் விபத்தில் உயிரிழந்த மனோகரன் மற்றும் சரவணன் உடலுக்கு தருமபுரி அரசு மருத்துவமனையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

தொபர்ந்து இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண நிதிக்கான அறிவிக்கப்பட்ட ரூ.5 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார். மேலும், காயமடைந்து தருமபுரி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் 4 பேரை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் தலா ரூ.50 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளை வழங்கினார்.

அதன் பின்னர், மாதேஅள்ளி கிராமத்துக்கு நேரில் சென்று தேர் விபத்து நடந்த பகுதியை பார்வையிட்ட அமைச்சர், விபத்து குறித்து கிராம மக்களிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், “தேர் திருவிழா தொடர்பாக கடந்த 8ஆம் தேதி பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடந்தது. அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையிலும், எதிர்பாராத விதமாக தேர் விபத்து நடந்துள்ளது. இது வருத்தத்துக்கு உரியது.

இதுபோன்ற விபத்துகளை ஓர் அனுபவமாக கொண்டு வருங்காலங்களில், தேர் திருவிழாவை நடத்துபவர்கள் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” என்று அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இந்நிகழ்வின் போது தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினர் ஜிகே மணி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.