மாமல்லபுரம்: அதிமுக நகர் மன்ற உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுவதால், மாமல்லபுரம் பேரூராட்சியைக் கைப்பற்ற திமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு பிப்.19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் மாமல்லபுரம் சிறப்பு நிலைபேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் அதிமுக 9 வார்டும், திமுக4 வார்டும், மதிமுக 1 வார்டிலும் வெற்றி பெற்றன. சுயேச்சை ஓரிடத்தில் வெற்றி பெற்றார். அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றதால், அதன் கவுன்சிலர்களான வளர்மதி தலைவராகவும், ராகவன் துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஏற்கெனவே மதிமுக கூட்டணியில் இருப்பதாலும், சுயேச்சை கவுன்சிலரான பூபதி, திமுகவில் இணைந்ததாலும் திமுக-வினரின் பலம் 6 ஆக இருந்து வந்தது. இந்நிலையில் 2-வது வார்டு கவுன்சிலர் சீனிவாசன், 12-வது வார்டு கவுன்சிலர் சரிதா ஆகிய இருவரும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

இதனால் திமுக கவுன்சிலர்களின் பலம் 8 ஆக அதிகரித்தது. தற்போது அதிமுக வசம் உள்ள தலைவர் பதவியை திமுக கைப்பற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக விரைவில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து, மாமல்லபுரம் பேரூராட்சியை கைப்பற்ற திமுக தீவிரம் காட்டி வருவதாக தெரிகிறது.

2001-ம் ஆண்டுக்குப் பிறகு பேரூராட்சியை கைப்பற்ற முடியாத திமுக தற்போது 2 கவுன்சிலர்களை தங்கள் பக்கம் இழுத்து 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாமல்லபுரம் பேரூராட்சியை கைப்பற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அதிமுகவை சேர்ந்த துணைத் தலைவர் ராகவனுக்கும் கவுன்சிலர்கள் சீனிவாசன், சரிதா ஆகியோருக்கு இடையே உள்ள கருத்து வேறுபாட்டை அறிந்த திமுகவினர் அவர்களை தங்கள் பக்கம் வருமாறு செய்துள்ளதாக கூறப்படுகிறது.