தேர்தலின்போது அளித்த முக்கியமான வாக்குறுதிகளைக்கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தமாகா சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கட்சித் தலைவர் ஜி.கேவாசன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் விடியல் சேகர், இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.வாசன் பேசியதாவது:

எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்பதற்காக தேர்தலின்போது நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம், கரும்புக்கு டன்னுக்கு ரூ.4 ஆயிரம், மாதந்தோறும் மின் பயனீட்டு அளவு கணக்கீடு, நீட் தேர்வு ரத்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை, கல்விக் கடன் தள்ளுபடி, டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 குறைப்பு, சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.100 மானியம் என்று எண்ணற்ற வாக்குறுதிகளை திமுக அளித்தது. இதை நம்பித்தான் மக்கள் வாக்களித்தனர்.

திமுக ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் கடந்துவிட்டது. பொது பட்ஜெட், விவசாய பட்ஜெட்டில் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட முக்கிய அறிவிப்புகள்கூட இடம்பெறவில்லை. மாதந்தோறும் மின் பயனீட்டு அளவு கணக்கீடு, குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 போன்ற முக்கியமான வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்றவில்லை. அது மக்களை ஏமாற்றும் செயல்.

கடந்த அதிமுக ஆட்சியையும், மத்திய அரசையும் குறைசொல்லி தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து திமுக அரசு தப்பித்துக் கொள்ள பார்க்கிறது. இதை மக்கள் ஏற்க மாட்டார்கள். திமுக அரசை கண்டித்து தமிழகத்தில் அனைத்து மாநகராட்சிகளிலும் தமாகா சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.