‘‘கே.பழனிசாமி பக்கம் டெண்டர் கம்பெனியை சேர்ந்தவர்கள் உள்ளனர். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் பக்கம் இருப்பவர்கள் தொண்டர் அணியை சேர்ந்தவர்கள் உள்ளனர், ’’ என்று ஓ.பன்னீர்செல்வம் அணி அதிமுக மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

மதுரை மாநகர அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். அவர் தற்போது பொறுப்பேற்று மாநகரத்தில் உள்ள தொண்டர்கள், நிர்வாகிகளை வார்டு வாரியாக சந்தித்துக் கொண்டிருக்கிறார். இன்று அவர் பதவியேற்றப்பிறகு கே.கே.நகரில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். தொண்டர்கள், நிர்வாகிகள் தலைமையில் அவர் மதுரை ராஜா முத்தையா மன்றம் அருகே இருந்து ஊர்வலமாக திரண்டு வந்து கே.கே.நகர் ரவுண்டாவில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கட்சியை காக்கவும் தொண்டர்களை பாதுகாக்கவும் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அணி வகுத்துள்ளோம். கே.பழனிசாமி அணியில் இருப்பவர்கள் டெண்டர் அணியை சேர்ந்தவர்கள். ஓபிஎஸ் பக்கம் இருப்பவர்கள் தொண்டர் அணியை சேர்ந்தவர்கள். எதிர் அணியில் இருப்பவர்கள் அனைவரும் கட்சிக்கும், தொண்டர்களுக்கும் நம்பிக்கை துரோகம் செய்து கே.பழனிசாமியின் கொத்தடிமைகளாக உள்ளனர். அவர்கள் தொண்டர்கள் இல்லாமல் இயங்குகின்றனர். ஆனால், நாங்களோ தொண்டர்கள் பலத்தோடு நிற்கிறோம். இந்த படை தமிழகம் முழுவதும் எழுச்சியோடு புறப்படப்போகிறது. ஜெயலலிதாவால் கட்சியில் தனக்கு அடுத்து என்று ஓபிஎஸ் மட்டுமே அடையாளம் காணப்பட்டார். அதனால் ஜெயலலிதா வழிநடத்திய இயக்கத்தை ஓ.பன்னீர்செல்வத்தால் மட்டுமே தலைமை தாங்க முடியும்.

தற்போது அதிமுகவில் தொண்டர்களை பாதுகாக்க தலைமை ஏற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், 2026ம் ஆண்டில் சட்டசபையில் தேர்தலில் வெற்றிப்பெற்று தமிழக மக்களை பாதுகாக்கக்கூடிய முதலமைச்சராக பொறுப்பேற்பார். கூடிய விரைவில் அதிமுக வடிகட்டப்படும். அதில் இன்னும் சிலர் வெளியேற்றப்பட்டப்பிறகு அதிமுக தூய்மைப்படுத்தப்படும். இன்று 1 1/2 கோடி தொண்டர்களாக இருக்கக்கூடியவர்கள், நாளைக்கு இந்த கட்சியை வழிநடத்தக்கூடிய தலைவராக வருவார்கள்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.