சஞ்சு சாம்சனை அணியில் எடுக்காமல் அணி நிர்வாகம், தேர்வுக்குழுவினர், கேப்டன் போன்றோரை ரசிகர்கள் கடுமையாக வசை மாரி பொழிந்து வருவது தவறு என்றும். சஞ்சு சாம்சனுக்கு ஆடும் லெவனில் இடம் இல்லை என்றும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

சஞ்சு சாம்சன், இதுவரை 11 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், 17 டி20 சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். இதில் டி20 கிரிக்கெட்டில் இவரது சராசரி 20.06. ஒருநாள் கிரிக்கெட்டில் 11 போட்டிகளில் 330 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 301 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால், இவருக்கு சீராக அணியில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்பதுதான் உண்மை. ஒரு போட்டியில் ஆட வைத்தால் அடுத்த போட்டியில் உட்கார வைக்கப்படுவார்.

சூப்பர்ஸ்டார்கள் குடும்பச் சுற்றுலா நிமித்தமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் போது மட்டுமே இவருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படும். அவர்கள் அணிக்குத் திரும்பிய பிறகு அந்த வாய்ப்பு மீண்டும் பிடுங்கப்படும். இவரை ஒரு அனுபந்தமாக, யாராவது இல்லையென்றால் அந்த இடத்தை இட்டு நிரப்பும் வீரராகவே பயன்படுத்துகின்றனர். இது ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை ஈர்த்து வருகின்றது.

இப்போது கே.எல்.ராகுலுக்கு வழங்கப்படும் வாய்ப்புகளைப் பார்க்கும் போது சஞ்சுவுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்பதே உண்மை. ஆனால் ஆகாஷ் சோப்ரா, வாய்ப்புகளை பயன்படுத்தவில்லை என்கின்றார். சரி! ஆகாஷ் சோப்ரா கூறுவதை ஒரு வாதத்திற்கு ஏற்றுக் கொள்வோமானால், ஒருநாள் போட்டியில் வங்கதேசத்தில் 210 ரன்களை விளாசிய இஷான் கிஷனுக்கு தொடர் வாய்ப்புகள் வழங்க வேண்டும். ஆனால், அவரையும் இழுத்தடித்துத்தான் பார்க்கின்றார்கள். தினேஷ் கார்த்திக் மீதும் அவர் கொடுத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு.

ஆனால், ஆடிக்கொருதரம், அமாவாசைக்கொருதரம் வாய்ப்பு கொடுப்பது, அதுவும் இங்கிலாந்தில் கொடுப்பது, நியூஸிலாந்தில் கொடுப்பது பிறகு அவர் ஆடவே இல்லை என்பது, சூப்பர் ஸ்டார்கள் பலரும் இந்தியாவில் ஆடும் வாய்ப்பை தவற விடுவதில்லை. ஏனெனில், இந்த சொத்தைப் பிட்சில் சதங்களைக் குவித்து ஆவரேஜை ஏற்றிக் கொள்ளத்தான், பாவம்! அந்த வாய்ப்புகள் சஞ்சுவுக்கோ, தினேஷ் கார்த்திக்கிற்கோ வழங்கப்பட மாட்டாது என்பதே நிலவரம்.

இந்நிலையில், சஞ்சு சாம்சன் விவாதத்தில் ஆகாஷ் சோப்ரா கூறும்போது, “சஞ்சு சாம்சனை அணியில் எடுங்கள் அனைத்தும் சரியாக அமையும், நாம் உலகக் கோப்பை இறுதியில் வென்றிருப்போம் என்ற அளவுக்கு பேசுகின்றனர். ரசிகர்களுக்கு என்ன புரியவில்லை எனில் சஞ்சு ஆடிய இன்னிங்ஸ்களில் பவுலர்களுக்கு ஒன்றும் எடுத்திருக்காது, தினேஷ் கார்த்திக் அல்லது பந்த் இவருக்கு முன்னதாக இறங்கியிருப்பார்கள். சஞ்சுவின் பேட்டிங் எந்த ஒரு வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை” என்று ஒரே போடாகப் போட்டு விட்டார்.

சஞ்சு சாம்சன் குறித்து அவரது இந்தக் கருத்து நிச்சயம் விமர்சனத்திற்குரியதே. சஞ்சுவுக்கு எத்தனை போட்டிகளில் தொடர் வாய்ப்புகள் வழங்கப்பட்டது என்பதை ஆகாஷ் சோப்ராவிடம் ஒரு கேள்வியாக முன் வைப்போம்.