குற்றாலத்தில் பெய்த பலத்த மழையால் அருவிகளில் நேற்று மாலை திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பிரதான அருவியில் குளித்துக்கொண்டு இருந்த 5 பேர் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தென்காசி மாவட்டத்தில். பலத்த மழையால் குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பிரதான அருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி நீர் கொட்டியது. திடீர் வெள்ளம் ஏற்பட்டதால் அருவியில் குளித்துக்கொண்டு இருந்த 5 பேர் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர். இதனால், அருகில் குளித்துக்கொண்டு இருந்தவர்கள் கூச்சலிட்டனர்.

உடனடியாக குளித்துக்கொண்டு இருந்தவர்களை போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் வெளியேற்றிவிட்டு, தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அருவி அருகே நடை மேம்பாலம் அருகேஒரு பெண் சடலமாக மீட்கப்பட்டார். மெயின் ரோடு, அண்ணா சிலை அருகே மற்றொரு பெண் சடலமாக மீட்கப்பட்டார். அருவி நீர் செல்லும் பகுதியில் தத்தளித்துக்கொண்டு இருந்த 3 பேரை குற்றாலத்தில் கடை வைத்துள்ள வியாபாரிகள் விரைந்து மீட்டனர்.

சடலமாக மீட்கப்பட்டவர்கள் சென்னை, பெரம்பூரைச் சேர்ந்த மல்லிகா (35), கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்த கலாவதி (55) என்பது தெரியவந்தது. வேறு யாராவது வெள்ளத்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார்களா என்பது குறித்து கண்டறிய தொடர்ந்து தீயணைப்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் சுற்றுலாப் பயணிகளையும் உள்ளூர் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.