கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணநல்லூர் கிராமத்தில் செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இதில் தனிநபரால் அன்பளிப்பாக அளிக்கப்பட்ட வெங்கல விநாயகர் சிலை இருந்தது.

கடந்த 2006-ம் ஆண்டு இந்த திருடு போனது. இது குறித்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு தேடி வந்த நிலையில், அச்சிலை சென்னையில் கண்டுபிடிக்கப்பட்டது. மீட்கப்பட்ட விநாயகர் சிலையை கோயிலுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவர்கள் அரசு பாண்டியன் (வீராணநல்லூர்), சுதா மணிரத்தினம் (நாட்டார் மங்கலம்) மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் ஆகியோரிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி சைலேஷ்குமார் யாதவ் மற்றும் போலீஸார் அந்தச் சிலையை ஒப்படைத்தனர். தொடர்ந்து சிலைக்கு அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோயிலில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

சிலை திருட்டு தடுப்பு பிரிவின் டிஎஸ்பிகள் முத்துராஜா, மோகன், இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் போலீஸார் ஆகியோர் உடனிருந்தனர். சென்னையைச் சேர்ந்த மறைந்த தீனதயாளன் என்பவர் இந்த சிலையை கடந்த 2006-ம் ஆண்டு கடத்திச் சென்று ரூ.50 ஆயிரத்திற்கு, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியைச் சேர்ந்த ஷோபா துரைராஜன் என்பவரிடம் பூஜை செய்வதற்காக விற்பனை செய்துள்ளார்.

அவரது வீட்டில் இருந்து விநாயகர் சிலை மீட்கப்பட்டது. இந்த சிலையின் பின்புறம் உபயதாரர் பெயர் பத்மாவதி அம்மாள் மற்றும் ஊர் பெயர் இருந்தது. அதன் அடிப்படையில் கண்டறியப்பட்டு இச்சிலைஉரிய கோயில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.