கிராமப்புறங்களில் அதிமுக-விற்கு  வெற்றி என்பது நல்ல விளைச்சலில் உள்ளது என்றும் அதை அறுவடை செய்யும் பணிகளில் நிர்வாகிகள் முழு வீச்சில் ஈடுபட வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டதால் வார்டு மறுவரையறை காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு இந்த மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. 

இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் மேற்கண்ட ஒன்பது மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இதற்கிடையில்  தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து போட்டியிடுகின்ற வேட்பாளர், அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி.பழனிச்சாமி கலந்து கொண்டார். பின்னர் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனைகளை வழங்கி பேசினார் அதில், தென்காசியை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேட்டு கொண்டதற்கிணங்க தென்காசி புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதனை சாக்காக வைத்து தி.மு.க-வினர் தேர்தலை தள்ளி வைக்க நீதிமன்றம் வரை சென்று தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவுப்படி தான் தி.மு.க தேர்தலை அறிவித்துள்ளது. இன்றைக்கு தேர்தலை சந்திக்க கூடிய சூழ்நிலையில் உள்ளோம். தென்காசி அதிமுக-வின் கோட்டை என்று நிரூபித்து காட்ட வேண்டிய சூழலில் உள்ளோம். நடை பெற்ற சட்டமன்ற தேர்தலில் தென்காசி மாவட்டத்தில் குறைந்த வாக்குகளில் தான் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளோம். நகர்புறங்களில் மட்டுமே வாக்குகள் குறைவாக கிடைத்துள்ளது என்றார்.

கிராமப்புறங்களில் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆகவே கிராமங்களில் நல்ல விளைச்சல் உள்ளது. அறுவடை பணிகளில் நல்ல முறையில் பணியாற்ற வேண்டும். எத்தனையோ துறைகள் இருந்தாலும் மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்றி சேவை செய்கின்ற வாய்ப்பு உள்ளாட்சி துறையில் மட்டுமே உள்ளது என கூறினார். 

தேர்தல் நேரத்தில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து வாக்குகளை பெற்று மக்களை ஏமாற்றி கொண்டிருக்ம் அரசு தான் தி.மு.க. தேர்தல் நேரத்தில் தி.மு.க  525 அறிவிப்புகளை வெளியிட்டது. ஆனால் ஆட்சி பொறுப்பேற்று 4 மாதங்கள் ஆகிறது. எத்தனை அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெயருக்கு 2, 3 திட்டங்களை நிறைவேற்றியுள்ளனர் என கூறினார்.

ஆகவே ஒவ்வொரு வாக்கும் முக்கியம். தேர்தல் நேரத்தில் நிர்வாகிகள் விழிப்போடு இருக்க வேண்டும். வாக்களித்த பிறகு வாக்குப்பெட்டிக்கு சீல் வைப்பதில் இருந்து, வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் வரை நிர்வாகிகள் கவனமாக இருக்க வேண்டும் என கூறிய அவர், தென்காசி மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர் அனைவரும் வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று பேசினார்.