மரடோனா உயிருடன் இருந்திருந்தால் அவரிடமிருந்து கால்பந்து உலகக் கோப்பையை பெற தான் விரும்பியதாக அர்ஜென்டினாவின் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். இதை ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் மெஸ்ஸி பகிர்ந்துள்ளார்.

கால்பந்தாட்ட உலகின் ஜாம்பவான்களாக மெஸ்ஸியும், மரடோனாவும் அறியப்படுகிறார்கள். இருவரும் அர்ஜென்டினாவுக்காக உலகக் கோப்பையை வென்று கொடுத்தவர்கள். இந்நிலையில், மெஸ்ஸி இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 2020 நவம்பரில் மரடோனா மறைந்தார். அர்ஜென்டினாவுக்காக 1977 முதல் 1994 வரையில் சர்வதேச அளவில் 91 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதன் மூலம் தன் நாட்டுக்காக அவர் பதிவு செய்த மொத்த கோல்களின் எண்ணிக்கை 34.

“மரடோனா உயிருடன் இருந்திருந்தால் அவரது கைகளால் உலகக் கோப்பையை பெற நான் விரும்பி இருப்பேன். அது நடக்காமல் போயிருந்தால் குறைந்தபட்சம் அவர் இந்த காட்சியை பார்த்திருக்கலாம். அவரும், என் மீது நேசம் கொண்டவர்கள் பலரும் விண்ணிலிருந்து எனது அனைத்துக்குமான உந்து சக்தியாக இருக்கிறார்கள்.

நெதர்லாந்து அணிக்கு எதிராக நான் அப்படி செய்திருக்க கூடாது. அதை நான் விரும்பவும் இல்லை. அதற்கு பிறகு நடந்தவற்றையும் நான் விரும்பவில்லை. இருந்தாலும் அந்தத் தருணத்தில் நடந்தது அது. பதற்றம் நிறைந்த அந்த நேரத்தில் அனைத்தும் வேகமாக நடந்தது. இதில் எந்த திட்டமுமும் இல்லை” என மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் அர்ஜென்டினா மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டிக்கு முன்னதாக நெதர்லாந்து அணியின் பயிற்சியாளர் எதிரணியை காட்டிலும் தங்கள் அணி வீரர்கள் பெனால்டி ஷூட் அவுட்டுக்கு தயார் நிலையில் இருப்பதாக சொல்லியிருந்தார். அதை கருத்தில் கொண்டே ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிறகு நெதர்லாந்து அணி பயிற்சியாளரை நோக்கி சைகையால் சேட்டை செய்திருந்தார். அதைதான் இப்போது மெஸ்ஸி நினைவு கூர்ந்துள்ளார். மேலும், அந்தப் போட்டி முடிந்ததும் நெதர்லாந்து பயிற்சியாளருக்கு அருகில் சென்று விரல்களை கொண்டு சில சைகையும் செய்திருந்தார். அப்போது மெஸ்ஸி களத்தில் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தார்.