சீர்திருத்தம், மாற்றம், முன்னேற்றம் எனும் பாதையில் கடந்த 2014 முதல் இந்தியா பயணிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசம் சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு அம்மாநிலத்தின் இந்தூர் மாநகரில் நடைபெற்று வருகிறது. புதுடெல்லியில் இருந்தவாறு பிரதமர் நரேந்திர மோடி இதில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, ”வலிமையான ஜனநாயகம், நிறைந்த இளைஞர் சக்தி, நிலையான அரசு ஆகியவை இந்தியாவுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்து வருகிறது. இதன் காரணமாக அனைவருக்கும் சிக்கலற்ற வாழ்க்கையை உறுதிப்படுத்தவும், எளிதாக தொழில்களைத் தொடங்கி நடத்தவும் தேவையான நடவடிக்கைகளை இந்தியா ஊக்குவித்து வருகிறது.

கடந்த 2014ம் ஆண்டில் இருந்து இந்தியா, சீர்திருத்தம், மாற்றம், முன்னேற்றம் எனும் பாதையில் பயணித்து வருகிறது. முதலீடுகளைச் செய்வதற்கு இந்தியா மிகச் சிறந்த இடமாக திகழ்கிறது. உலகின் நம்பகமான பொருளாதார அமைப்புகள் இந்தியாவின் வளர்ச்சியை புகழ்ந்துள்ளன. உலக பொருளாதாரத்தில் இந்தியா நம்பிக்கை அளிக்கும் ஒளிப் புள்ளியாக திகழ்கிறது என சர்வதேச கண்காணிப்பு நிதியம் தெரிவித்துள்ளது. உலக சிக்கல்களைத் தீர்ப்பதில் மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியா சிறப்பாக செயல்படுவதாக உலக வங்கி கூறியுள்ளது. வலிமையான அடித்தளத்துடன் மிகப் பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா திகழ்வதே இதற்குக் காரணம்.

தனியார் துறை மீதான இந்தியாவின் நம்பிக்கை தற்போது மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இதன் காரணமாகவே, பாதுகாப்பு, சுரங்கம், விண்வெளி உள்ளிட்ட துறைகளும் தனியாருக்காக திறந்துவிடப்பட்டுள்ளது. ஜி20 நாடுகளில் மிக வேகமான பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என்று பொருளாதார ஒத்துழைப்பு வளர்ச்சி அமைப்பு எனும் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. இது இந்தியாவின் 10 ஆண்டுகள் மட்டுமல்ல; இது இந்தியாவின் நூற்றாண்டும்கூட என்று பன்னாட்டு நிறுவனமான மெக்கின்சியின் தலைமை செயல் அதிகாரி மோர்கன் ஸ்டேன்லி கூறி இருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வளர்ச்சி அடைந்த இந்தியாவை அடைய நாங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்.” இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.