புதுடெல்லி: இந்திய விமானப் படையைச் சேர்ந்த மேலும் 2 விமானங்களில் மீட்புப் படையினரையும், நிவாரணப் பொருட்களையும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு இந்தியா அனுப்புகிறது.

சிரிய எல்லையை ஒட்டிய துருக்கி பகுதியில் நேற்று நிகழ்ந்த தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கி உள்ள பலரின் நிலை குறித்து இதுவரை தகவல் இல்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. .

நிலநடுக்கம் குறித்த தகவல் அறிந்ததும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் அளிக்க இந்தியா தயார் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அவரது அறிவிப்பை அடுத்து, இந்தியா சார்பில் இந்திய விமானப்படை விமானம் மூலம் 100 பேர் அடங்கிய மீட்புப் படையினர், மீட்புக்கான பொருட்கள், மோப்ப நாய்கள், மருத்துவக் குழுவினர், மருந்து பொருட்கள் துருக்கிக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

அதிகாலை 3.09-க்கு காசியாபாத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானப்படை விமானம், துருக்கியின் அதானா விமான நிலையத்தை அடைந்துவிட்டதாக இன்று நண்பகல் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மேலும் இரண்டு விமானப் படை விமானங்கள் மூலம் கூடுதல் மீட்புப் படையினர், 89 பேர் அடங்கிய மருத்துவக் குழு, நகரும் மருத்துவமனை, அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள், எக்ஸ் ரே இயந்திரங்கள், வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் உற்பத்தி நிலையம், இதயத்துடிப்பை கண்காணிக்கும் இயந்திரங்கள், 30 படுக்கைகள் உள்ளிட்டவை துருக்கிக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதேபோல், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவுக்கும் நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட உள்ளன. உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் ஆகியவை சிரியாவுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது. எனினும், மீட்புக்குழு மற்றும் மருத்துவக் குழுவை அனுப்பும் திட்டம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.