மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வது கட்டாயம் இல்லை என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நெல்லையைச் சேர்ந்த அப்துல் வஹாப், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

”கரோனா நோய்த் தொற்றின் மூன்றாம் அலை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்றிருக்கும் சூழலில், நாளை முதல் ( செப்டம்பர் 1) ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் திறக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

பள்ளி செல்லும் மாணவர்கள் முழு நேரமும் முகக்கவசம் அணிந்திருப்பதும், அதனை முறையாகப் பின்பற்றுவதும் சாத்தியமில்லாதது. கரோனா தடுப்பூசியை 18 வயதிற்குக் கீழ் உள்ளவர்களுக்குச் செலுத்துவது தொடர்பாக இதுவரை தெளிவான முடிவுகள் எதுவும் எட்டப்படாத நிலையில், இரு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்படாமல் மாணவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வது தொற்றுப் பரவலை அதிகரிக்கச் செய்யும்.

மாணவர்கள் சுழற்சி முறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதனால் ஒரே வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு இடையேயான கற்றலில் வேறுபாடுகள் எழ வாய்ப்புள்ளது. இது ஆசிரியர்களுக்குக் கூடுதல் சுமையாக அமையும். அனைத்து மாணவர்களும் நேரடியாகப் பள்ளிக்கு வர வேண்டும் என வற்புறுத்தாமல் ஆன்லைன் வழியாக வகுப்புகளைக் கவனிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும்.

எனவே, கரோனா தொற்றின் மூன்றாம் அலை நெருங்கியுள்ளதைக் கருத்தில் கொண்டு, நேரடியாக அல்லாமல், ஆன்லைன் வழியாகவும் மாணவர்கள் வகுப்புகளை கவனிக்க அனுமதிக்க வழிகாட்டல்களை வழங்க உத்தரவிட வேண்டும்”.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ”அரசு அனைத்து நிபுணர்களுடன் ஆலோசித்தே பள்ளி, கல்லூரிகளைத் திறக்க முடிவு எடுத்திருக்கும்” என்று தெரிவித்தனர்.

அரசு வழக்கறிஞர் வதிடுகையில், ”பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறை சார்பில், சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட வழிகாட்டல்கள் முறையாகப் பின்பற்றப்படும். 50% குறைவாகவே மாணவர்கள் அழைக்கப்படுவர்.

அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளும் எடுக்கப்படும். இணைய வழியில் பாடங்கள், வகுப்புகள் பகிரப்படும். கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படும். பல்துறை நிபுணர்களோடு ஆலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கபட்டுள்ளது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டே பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில், “நேரடியாக வகுப்புகளுக்கு வருமாறு மாணவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டது.

அரசுத் தரப்பில், “மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு வருமாறு கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.