சமீப நாட்களாகவே மதுரை உள்ளிட்ட ஒரு சில நகரம், கிராமப்புற பகுதியில் இருந்து இலவச அழைப்பை (100) தொடர்பு கொள்ள முடியாததால் போலீஸாரை அழைக்க முடியாமல் மக்கள் தவித்துவருகின்றனர்.

தமிழகத்தில் மாநகராட்சி, மாவட்ட காவல்துறை அலுவலங்களுக்கென பிரத்யேகமாக காவல் கட்டுப்பாட்டு அறைகள் செயல்படுகின்றன. பொதுமக்கள், தனிநபர்கள் தங்கள் பிரச்னைகள், பொது இடங்களில் நடக்கும் குற்றச் செயல்களை தடுக்க, காவல் நிலையங்களை அணுக முடியாத சூழலில் இருந்த இடத்தில் இருந்தே தெரிவித்து, தீர்வு காணும் வகையில் கட்டுப்பாட்டு அறைகளுக்கு இலவச அழைப்பு எண்-100க்கு தெரிவித்து, காவல்துறையினரை வரவழைக்கும் வசதி நடைமுறையில் உள்ளது.

ஏற்கெனவே அந்தந்த மாவட்ட காவல்கட்டுப்பாட்டு அறைகள் மூலமே செயல்பட்ட நிலையில், காவல்துறையின் நவீன மயமாக்கத்தால் தமிழக அளவில் பொதுமக்களின் புகார், தகவல்களை ஒரே இடத்தில் சேகரித்து, ஆன்லைனில் அந்தந்த மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி, சம்பந்தப்பட்ட காவல்துறை யினரை உஷார் செய்து துரித நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன்படி, சென்னையிலுள்ள நவீன கட்டுப்பாறை அறையின் மூலம் தகவல்களை ஒருங்கிணைத்து, சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு தெரிவிக்கும் வசதி தற்போது நடைமுறையில் இருக்கிறது.

இந்நிலையில் சமீப நாட்களாகவே மதுரை உள்ளிட்ட ஒருசில நகரம், கிராமப்புற பகுதியில் இருந்து இலவச அழைப்பை (100) தொடர்பு கொள்ள முடியவில்லை. பிஎஸ்என் எல், ஜியோ போன்ற ஓரிரு நெட்வொர்க் தவிர, ஏர் டெல், வோடபோன் உள்ளிட்ட பிற நெட்வோர்க் வாயிலாக சென்னை காவல்துறை ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ள இயலவில்லை என்றும், இதனால் குற்றச் செயல்களை தடுக்க காவல்துறையினரை அவசரமாக அழைக்க முடியாத சூழல் உள்ளது எனவும் பொது மக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கின்றனர்.

சென்னை கட்டுப்பாட்டு அறையை பிஎஸ்என்எல் நெட்வோர்க் மூலம் தொடர்பு கொண்ட போது, ”எங்களுக்கு எல்லா நெட்வொர்க்கிலும் இருந்தும் 100க்கான அழைப்புகள் வருகின்றன. அந்தந்த மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்களை ஆன்லைன் மூலம் அனுப்பி துரித நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்கிறோம். பிற நெட் வோர்க்களில் இருந்து கிடைக்கவில்லை என்றாலும் அது பற்றி ஆய்வு செய்து, கிடைக்கும்படி செய்வோம்,” என்றார்.