திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைகிறது. இன்றும், நாளையும் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1ம் தேதி தொடங்கும். இந்தாண்டு 3 நாட்களுக்கு முன்பாகவே பருவமழை தொடங்கியது. தொடக்கத்தில் மழை குறைவாக இருந்தாலும் இன்று முதல் மழை தீவிரமடையும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று முதல் வரும் 5 நாட்களுக்கு கேரளா முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்யும் என்று திருவனந்தபுரம் வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்று எர்ணாகுளம், ஆலப்புழா, இடுக்கி உள்பட 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து நாளை 6 மாவட்டங்களுக்கும், 9ம் தேதி 7 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு கேரள கடல் பகுதியில் மீன்பிடிக்க மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.