ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை வரும் திங்கட்கிழமை (ஜூலை 11) காலை 9 மணிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த மனுவில், “பொதுக்குழு கூட்டத்திற்கு 15 நாட்களுக்கு முன்பாக அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால் ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டம் தொடர்பான அறிவிப்பு நேற்று மாலை தான் தனக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் கூட்டப்படும் பொதுக் குழுக்கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார்.

இதேபோல், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து என்பவரும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா?, பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு தலைமைக்கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா?, எத்தனை நாட்களுக்கு முன் பொதுக்குழுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும்?, பொதுக்குழுவுக்கான அழைப்பிதழில் யார் கையெழுத்திடுவது என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, எடப்பாடி பழனிசாமி தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இபிஎஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், ஒருங்கிணைப்பாளர் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடராமல், பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்துள்ள வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேணடும் என இபிஎஸ் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை வரும் ஜூலை 11 (திங்கள்கிழமை) காலை 9 மணிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.