ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், என்னைப் பற்றி உண்மையை கூறியிருக்கிறார்” என்று சசிகலா கூறியுள்ளார்.

சென்னை தியாகராயநகரில் சசிகலா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “ஏதோ பதவியில் இருப்பவர்கள் நூறு பேருக்குள் கருத்து எடுத்தார்கள் என்றால், எங்களுடைய தலைமைக் கழகத்தில் இருந்து மற்ற பொறுப்புகளில் உள்ள கட்சித் தொண்டர்கள் என்ன நினைக்கின்றனரோ, அதுதான் இந்த இயக்கத்தில் நடக்கும். அதில் எனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு.

ஓ.பன்னீர்செல்வம் உண்மையைச் சொல்லியிருக்கிறார். ஆறுமுகசாமி ஆணையம் ஆரம்பிக்கப்பட்டபோது கூட, இதில் உண்மை என்னவென்று தெரிய வேண்டும்; பொதுமக்களுக்கும் தெரிய வேண்டிய விஷயம். எனவே ஆணையம் விசாரிப்பது நல்லது என்றுதான் நான் ஆரம்பித்தில் இருந்து கூறிவந்தேன். அது இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

மக்கள் என்மீது சந்தேகித்ததாக நான் ஏற்றுக்கொள்ளவே இல்லை. அரசியலில் என்னைப் பிடிக்காமல் இருப்பவர்கள் கூட இந்த மாதிரி ஒரு சொல்லை ஆரம்பித்து வைத்திருக்கலாம், அப்படிதான் நான் நினைக்கிறேன்” என்று அவர் கூறினார்.

ஓபிஎஸ் சொன்னது என்ன? – முன்னதாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்று விசாரணை ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர்ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் ஆணையத்தில் ஆஜரானார். அவரிடம் ஆணையம் தரப்பு வழக்கறிஞர்கள் விசாரணைநடத்தினர். இந்நிலையில், 2-வது நாளாக விசாரணை ஆணையத்தில் ஓபிஎஸ் நேற்று ஆஜரானார். அவரிடம் ஆணையம் தரப்பு வழக்கறிஞர் விசாரணை நடத்தினார். பின்னர் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டி குறுக்கு விசாரணை நடத்தினார். அப்போது ஓபிஎஸ் கூறியதாவது:

ஜெயலலிதா இறப்பதற்கு முந்தைய நாள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவருக்கு ‘எக்மோ கருவி’ பொருத்தப்பட்டு இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். டிச.5-ம் தேதிஜெயலலிதா இறப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு நானும் 3 அமைச்சர்களும் ஜெயலலிதாவைப் பார்த்தோம்.

ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ, அவரது குடும்பத்தினரோ சதித்திட்டம் எதுவும் தீட்டவில்லை. சசிகலா மீது தனிப்பட்ட முறையில் எனக்கு மரியாதை உண்டு. 2012-ம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்புவந்ததும், ஜெயலலிதா என்னை போயஸ் தோட்டத்துக்கு அழைத்தார். அப்போது கண் கலங்கிய நிலையில் இருந்த என்னை,‘‘நீங்கள் அழாதீர்கள், இப்போதுதான் நீங்கள் இன்னும் தைரியமாக இருக்க வேண்டும்’’ என்று ஜெயலலிதா ஆறுதல் கூறினார்.

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வேட்பாளர்களை ஜெயலலிதாதான் தேர்வு செய்தார். வேட்பாளர் படிவங்களில் ஜெயலலிதாதான் கைரேகை பதிவு செய்தார். ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட உணவுகள் குறித்து எனக்கு தெரியாது.

ஜெயலலிதா மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அதுகுறித்து பொதுமக்களிடம் சந்தேகம் இருந்ததால்தான் விசாரணை ஆணையம் அமைக்க கோரிக்கை விடுத்தேன் என்று இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, ஜெயலலிதாவுக்கு இதயத்தில் இருந்த பிரச்சினை, சிகிச்சைகள் தொடர்பாக ஓபிஎஸ்ஸிடம் ஆணையம் தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். அதற்கு அப்போலோ தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். மருத்துவம், சிகிச்சை தொடர்பானகேள்விகளை ஓபிஎஸ்ஸிடம் கேட்கக் கூடாது. மருத்துவக் குழு உதவியுடன் வேண்டுமானால் கேட்கலாம் என அப்போலோ தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அதை ஆணையம் ஏற்றுக் கொண்டது.

கடந்த 2 நாட்களில் மொத்தம் 9 மணி நேரம் ஓபிஎஸ்ஸிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில்ஆணையம் தரப்பில் 120 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அப்போலோ தரப்பு வழக்கறிஞர் 11 கேள்விகள், சசிகலா தரப்பு வழக்கறிஞர் 34 கேள்விகள் கேட்டுள்ளனர்.

சசிகலா மீது மதிப்பு, மரியாதை: பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், ‘‘ஆணையம் எனக்கு 7 முறை சம்மன் அனுப்பியது. பட்ஜெட் மற்றும் சொந்த காரணங்களால் நேரில் ஆஜராக முடியவில்லை. சசிகலா மீது எனக்குதனிப்பட்ட முறையில் மதிப்பும், மரியாதையும் உண்டு” என்றார்.