செங்கல்பட்டு அருகே திம்மாவரம், வாலாஜாபாத் அருகே அவளூர் ஆகிய பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:

மாநில சுயாட்சி பற்றி பேசும் திமுக, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களை பறிக்காமல் முழுமையான அதிகாரங்களை அளிக்க வேண்டும். தொண்டர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக இந்தத் தேர்தலில் நாம் தனித்து போட்டியிடுகிறோம். நீண்ட உழைப்புக்கு பிறகு ஸ்டாலின் முதல்வராகியுள்ளார். நாமும் நீண்ட காலமாக உழைத்து வருகிறோம். அடுத்து ஆட்சிக்கு வரப்போவது பாமகதான்.

நீட் தேர்வு மத்திய அரசு பட்டியலில் உள்ளதால் அதை நீக்க குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு காத்திருக்க வேண்டியுள்ளது என்றார்.

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது:

ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் பெறும் வெற்றியின் அடிப்படையில் எங்கள் பலத்தை நிரூபிப்போம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம். தமிழகத்தில் பாமக ஆட்சி அமைக்கும் என்றார்.