பொதுமக்களைப் பாதிக்கும் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி,5 மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு பெட்ரோல், டீசல்,சமையல் காஸ் சிலிண்டர் விலைகடுமையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. 137 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மக்கள் மீது சுமையை ஏற்றாமல் மானியங்களை வழங்கி, பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டது. ஆனால், பாஜக அரசு தொடர்ந்து மக்களைப் பாதிக்கும் வகையில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இதை எதிர்த்துகாங்கிரஸ் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும்.

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த்: பெட்ரோலியப் பொருட்கள் விலை ஏற்றத்தால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மக்களின் நலன் கருதி, விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன்: பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வால் அனைத்துப் பொருட்களின் விலையும் உயரும். இது மக்களை கசக்கிப் பிழியும் நடவடிக்கையாகும். மத்திய அரசு விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்: அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் தவித்து வரும் ஏழை, நடுத்தர மக்களால் இந்த விலை உயர்வை தாங்க முடியாது.

சமையல் எரிவாயு விலை கடந்த ஓராண்டில் ரூ.255 உயர்த்தப்பட்டிருக்கிறது. இது 36 சதவீத உயர்வாகும். இதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்கள் மீதான கலால் வரியைக் குறைத்து, விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்.

அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன்: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை மீண்டும் உயர்த்தியிருப்பது கண்டனத்துக்குரியது. இதனால் நாட்டின் பொருளாதாரம் மட்டுமின்றி, வீட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும். எனவே, பெட்ரோலியப் பொருட்கள் விலையைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து மீண்டும் அரசின் கட்டுபாட்டுக்கே கொண்டுவந்து, விலையைக் குறைக்க வேண்டும்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன்: பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வால் அனைத்துப் பொருட்களின் விலையும் உயரும். மத்திய அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டிப்பதுடன், விலை உயர்வைக் கைவிட வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

137 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது.