12ஆம் வகுப்புத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் தொடங்க உள்ளன. ஆகஸ்ட் 6-ம் தேதி மொழிப் பாடமும், ஆகஸ்ட் 9-ம் தேதி ஆங்கிலப் பாடமும் அடுத்தடுத்த நாட்களில் பிளஸ் 2 பிரிவுகளுக்கு ஏற்றவாறும் தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மே 2021-ல் பிளஸ் 2 தேர்வெழுத விண்ணப்பிக்கத் தவறிய தகுதியுள்ள தனித் தேர்வர்கள் இந்தத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். அதேபோல 2020- 2021ஆம் கல்வியாண்டில் பயின்ற பிளஸ் 2 மாணவர்களுக்கு 19.07.2021 அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் பெற்ற மதிப்பெண் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்கள், துணைத் தேர்வினை எழுத விண்ணப்பித்துள்ளனர்.

எனினும், மாணவர்கள் கட்டாயம் தங்களுக்குரிய அனைத்துப் பாடத் தேர்வுகளையும் எழுத வேண்டும். அத்தேர்வர்கள், குறிப்பிட்ட பாடத் தேர்வுகளை மட்டும் எழுத இயலாது.

இந்நிலையில் துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தேர்வு எழுத ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் https://apply1.tndge.org/private-hall-ticket-revised என்ற இணையதள முகவரியில் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும், தற்போது எழுதவுள்ள தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களே இறுதியானது என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: www.dge.tn.gov.in.