நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின்போது விதிமீறல்கள் நடக்கிறதா என்பதை போலீஸார் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு ஒரேகட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழு அளவில் செய்துள்ளது. அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக கட்சி தலைவர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கரோனா தடுப்பு விதிமுறைகளை வேட்பாளர்கள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். பணம், பரிசு பொருட்களை கொடுத்து வாக்காளர்களை கவர நினைத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

மேலும் வாகனங்களில் பரிசு பொருட்கள், அளவுக்கு அதிகமான பணம் கொண்டு செல்லப்படுகிறதா என பறக்கும் படையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரச்சாரத்தின்போது விதிமீறல் ஏதேனும் நடைபெறுகிறதா என போலீஸார் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், விதிமீறல் நடைபெற்றால் அதை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார். அதன் அடிப்படையில் விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

மேலும் அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் பிரச்சாரம் செய்யும்போது எதிர்தரப்பினருடன் கைகலப்பு, மோதல் ஏற்பட்டு விடாதபடி போலீஸார் தகுந்த முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.