ஹைதராபாத்: பிரதமர் நரேந்திர மோடி நாளை ஹைதராபாத் வர உள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஒரு கல்லூரி விழாவில் அவர் கலந்துக்கொள்ள உள்ளதால், இதில் பங்கேற்க உள்ள 930 மாணவ, மாணவியரின் சமூக வலைதள பக்கங்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

பிரதமர் நரேந்திர மோடி நாளை ஹைதராபாத் கச்சிபொலி பகுதியில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ் (ஐஎஸ்பி) கல்லூரியின் 20-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளார். இதனால், இப்போதிருந்தே ஹைதராபாத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய சிறப்பு பாதுகாப்பு பிரிவினர், அக்கல்லூரியை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இவர்களது அனுமதி இன்றி யாரும் இக்கல்லூரிக்குள் செல்லவும் முடியாது. வெளியே வரவும் முடியாது. அப்படி ஒரு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ள அக்கல்லூரியின் மாணவ, மாணவியர் 930 பேரின் பெயர் பட்டியல் பாதுகாப்பு பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ஒவ்வொருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு, அவர்களின் சமூக வலைத்தள பக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாணவர்களின் பட்டியலில் யாராவது மோடிக்கு எதிராக செயல்படுகிறார்களா? என்று தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வாட்ஸ் ஆப், ஃபேஸ் புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் கணக்குகள் ஆய்வு செய்யப்படுகின்றன.

மற்றொருபுறம் ஹைதராபாத் நகரில் பாதுகாப்பை போலீஸார் பலப்படுத்தி உள்ளனர். சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் யாராவது சுற்றி திரிந்தால் உடனடியாக அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.