சேலம் மாவட்டத்தில் அதிகமாக கரும்பு பயிரிடப்பட்டுள்ளதால், பிற மாவட்டங்களுக்கும் இங்கிருந்து கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது, என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்தார்.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்குவதற்கான கரும்புகள், அரசு சார்பில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது. எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பகுதியில் கரும்பு கொள்முதல் செய்யப்படுவதை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாவட்டத்தில் 10 லட்சத்து 74 ஆயிரத்து 453 குடும்பங்களுக்கு வழங்கும் வகையில் கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கென வட்டார அளவிலான குழு அமைக்கப்பட்டு, தரமான கரும்புகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. வரும் 9-ம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்பட உள்ளது.

சேலம் மாவட்டத்துக்கு தேவையான கரும்புகள் நமது மாவட்டத்திலிருந்தே கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில் அதிகமாக கரும்பு பயிரிடப்பட்டுள்ளதால் மற்ற மாவட்டங்களான நீலகிரி, கோவை, ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்குத் தேவையான கரும்புகளையும் இங்கு கொள்முதல் செய்கின்றனர்.

விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் அரசால் கரும்பு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயி களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக கரும்புக்கு உரிய தொகை வழங்கப் படுகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவில் கரும்புக்கு அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கரும்பு கொள்முதல் தொடர்பாக இடைத்தரகர்களையோ, இதர நபர்களையோ விவசாயிகள் நம்ப வேண்டாம், என்றார். ஆய்வின்போது, அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். வட்டார அளவிலான குழு அமைக்கப்பட்டு, தரமான கரும்புகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.