வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10,000 பேருக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்வை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 7-ம்தேதி பெய்த கனமழை காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.

இதையடுத்து, குடியிருப்புப் பகுதிகளிலும் வீடுகளிலும் வெள்ளநீர் சூழ்ந்தது. மாநகராட்சி சார்பில் மழைநீரை வெளியேற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ந்து 5வது நாளாக பெய்துவரும் மழையின் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் இன்று நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக மகளிரணிச் செயலாளருமான கனிமொழி நிவாரண உதவிகளை வழங்கியதாக எம்.பி.யின் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கனிமொழி எம்.பி.யின் அலுவலக செய்திக்குறிப்பில், ”சென்னை, திநகர் நாணா சாலை‌ பகுதியில், ஜெயின் அன்னபூர்ணா ட்ரஸ்ட் மற்றும் சென்னை புட் பேங்க் சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10,000 பேருக்கு உணவு மற்றும் நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வை கனிமொழி எம்.பி. இன்று (புதன்கிழமை) தொடங்கி வைத்தார். உடன், மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் மயிலை வேலு, தி.நகர் சட்டப்பேரவை உறுப்பினர் கருணாநிதி, திமுக பகுதி செயலாளர் ஏழுமலை மற்றும் ஜெயின் அன்னபூர்ணா ட்ரஸ்ட் நிர்வாகிகள், சென்னை ட்ரட்ஸ் பேங்க் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.