முழு ஊரடங்கு காலத்தில் பழுதடைந்த மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை செப்பனிட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

“கரோனாவின் 3-வது அலை உலகம் முழவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.கரோனாவின் தாக்கம் டெல்டா வைரஸ் மற்றும் ஒமைக்ரான் என்று உருமாற்றம் ஆகி மக்களிடையே பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் அவற்றை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுபாடுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் சென்ற மாதம் தமிழகம் முழவதும் பரவலாக மழை பெய்தது. கடும் மழையின் காரணமா மாநில சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் பாதிக்கப்பட்டு குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலை பழுதடைந்ததால் பல்வேறு இடங்களில் விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் தற்பொழுது கரோனா தாக்கத்தை முன்னிட்டு இரவு நேரங்களிலும், வார கடைசி நாட்களான ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அவை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை மத்திய, மாநில அரசுகள் செப்பனிட வேண்டும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிப்பது சாலை போக்குவரத்துதான். அதோடு கீழ்தட்டு மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை
அனைவரும் பெரிதும் பயன்படுத்துவதும் சாலை போக்குவரத்துதான்.

ஆகவே சாலை போக்குவரத்து பாதுகாப்பாக அமைய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரடங்கு நாட்களில் சாலைப்பணியை மேற்கொண்டால், போக்குவரத்து இடையூறு இல்லாமல் பணியும் குறுகிய காலத்திற்குள் விரைந்து முடிக்கப்படுவதால் அதிகமான செலவும் நேரமும் மிச்சமாகும். ஆகவே மத்திய, மாநில அரசுகள் துரிதமாக செயல்பட்டு பழுதடைந்த மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை செப்பனிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.