திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கெட்டுப்போன இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், நகராட்சி சுகாதார அலுவலர் மூர்த்தி, உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பல்வேறு இடங்களில் நேற்று சோதனை நடத்தினர்.

அப்போது, சந்தி வீரப்பன் கோயில் அருகே இறைச்சி கடை நடத்தி வரும் சகோதரர்களான ரமேஷ்( 42), சுரேஷ்(35) ஆகியோரின் கடைகளிலும், அவர்களுக்கு சொந்தமான சிக்கம் பிள்ளையார் கோயில் காந்தி சாலையில் உள்ள ஒரு கட்டிடத்திலும் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு குளிர்சாதன பெட்டிகளில் கெட்டுப்போன 150 கிலோ எடையுள்ள ஆட்டிறைச்சி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், சுரேஷூக்கு அபராதம் விதித்தனர்.