கேப் டவுன்: டி20 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.

ஐசிசி நடத்தும் டி20 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. நேற்று கேப்டவுனிலுள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.

முதலில் விளையாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் குவித்தது.

பாகிஸ்தான் வீராங்கனைகள் முனீபா அலி 12, ஜவேரியா கான் 8 ரன்கள் எடுத்தனர். ஆனால் கேப்டன் மரூஃப் அபாரமாக விளையாடி 68 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 55 பந்துகளைச் சந்தித்து இந்த ரன்களை அவர் குவித்தார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். அவருடன் இணைந்து ஆடிய ஆயிஷா நசீம் 25 பந்துகளைச் சந்தித்து 43 ரன்களை விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது ஸ்கோரில் 2 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும்.

இந்திய மகளிர் அணி தரப்பில் ராதா யாதவ் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். தீப்தி வர்மா, பூஜா வஸ்த்ரகர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைச் சாய்த்தனர்.

பின்னர் விளையாடிய இந்திய மகளிர் அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்திய அணி தரப்பில் யாஸ்திகா பாட்டியா 17, ஷபாலி வர்மா 33, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 16 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ், விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் ஆகியோர் அபாரமாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 53 ரன்களும், ரிச்சா கோஷ் 33 ரன்களும் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.