ஆசிய பாடி பில்டிங் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 9 பேர் பதக்கம் வென்றனர். அவர்களுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

54-வது ஆசிய பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் மாலத்தீவில் கடந்த 15-ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடைபெற்றது. இதில் ஆசிய கண்டத்தில் உள்ள 24 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவில் இருந்து 79 பேர் பங்கேற்றனர்.

இதில் தமிழகத்தில் இருந்து கலந்து கொண்டவர்களில் 9 பேர் பதக்கம் வென்றுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் பிரிவில் சுரேஷ் தங்கப் பதக்கம் வென்றார். 75 கிலோவுக்கு மேற்பட்ட ஜூனியர் பிரிவில் சுரேஷ், 70 கிலோ எடைப் பிரிவில் ஹரிபாபு, 90 கிலோ எடைப்பிரிவில் சரவணன், 100 கிலோ எடைப் பிரிவில் கார்த்தீஸ்வர் ஆகியோரும் தங்கம் வென்றனர். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான மாஸ்டர் பிரிவில் ரத்தினம் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

40 முதல் 49 வயதுடையவர்களுக்கு மாஸ்டர் பிரிவில் புருஷோத்தமன், 60 கிலோ எடைப் பிரிவில் விக்னேஷ், 100 கிலோவுக்கு மேலான எடைப் பிரிவில் ராஜ்குமார் ஆகியோர் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர். 50 முதல் 59 வயது வரை 80 கிலோவுக்கு மேலான எடைப் பிரிவில் ஸ்டீபன்4-வது இடத்தையும், ஆடவருக்கான அத்லெடிக் ஃபிஸிக் பிரிவில் கார்த்திக் ராஜ் 5-வது இடத்தையும் பிடித்தனர். இந்தத் தொடரில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்தியா வென்றது. இந்த அணிக்கு தமிழ்நாடு அமெச்சூர் பாடிபில்டிங் சங்கத்தின் செயலாளர் எம்.அரசு பயிற்சியாளராக செயல்பட்டிருந்தார்.