திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கூட்டணிக் கட்சிஎம்எல்ஏக்கள் 8 பேரை, எதிர்க்கட்சி உறுப்பினர்களாக கருதி சட்டப்பேரவையில் இருக்கை ஒதுக்கஎதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவையை சேர்ந்த வழக்கறிஞர் எம்.லோகநாதன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு:

சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுகவின் அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா, மதுரை தெற்கு பூமிநாதன், வாசுதேவநல்லூர் சதன் திருமலைக்குமார், சாத்தூர்ஏஆர்ஆர் ரகுராமன், கொமதேக திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன், மமக பாபநாசம் எம்எல்ஏஜவாஹிருல்லா, மணப்பாறை அப்துல் சமது, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பண்ருட்டி எம்எல்ஏ டி.வேல்முருகன் ஆகிய 8 பேரும் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

இவர்கள் வெவ்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் என்று தெரிந்தும், திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட அனுமதித்தது சட்டவிரோதமாகும்.

இதேபோல, புரட்சிபாரதம் கட்சியை சேர்ந்த எம்.ஜெகன்மூர்த்தி அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு, கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவாகி உள்ளார்.

வாக்காளரை ஏமாற்றும் செயல்

இவர்கள் அனைவரும் சொந்தசின்னத்தில் போட்டியிட முடியாதசூழல் ஏற்பட்டதால், உதயசூரியன், இரட்டை இலை சின்னங்களில் போட்டியிட்டு, வெற்றி பெற்றுள்ளனர். திமுக, அதிமுக உறுப்பினராக இல்லாத இவர்கள், தேர்தலில் போட்டியிடும்போது மட்டும் திமுக, அதிமுக உறுப்பினர் என்று உண்மைக்குப் புறம்பாக கூறி வேட்புமனு தாக்கல் செய்து, வெற்றி பெற்றுள்ளனர். இது வாக்காளர்களை ஏமாற்றும் செயல். ஏனெனில், வாக்காளர்கள் பெரும்பாலும் சின்னங்களைப் பார்த்துதான்வாக்களிக்கின்றனர்.

இந்நிலையில், இந்த 8 பேரும் எதிர்க்கட்சி உறுப்பினர்களாக சட்டப்பேரவையில் கருதப்படுகின்றனர்.

ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சியின்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள இவர்களை, எதிர்க்கட்சி உறுப்பினர்களாக பார்க்க முடியாது. மக்களுக்கான விவாதங்களின்போது இவர்கள் யாருக்குஆதரவாக குரல் கொடுப்பார்கள்என்பது அரசியல்ரீதியாக முரண்பாடாகிவிடும். ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கிவிடும்.

கடந்த மே 13-ம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்த 8 பேரும், தங்களது கட்சி சார்பில் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தில் 8 அரசியல் கட்சிகள் மட்டுமே தேர்தலில் முறைப்படி வெற்றி பெற்று, சட்டப்பேரவைக்குள் சென்றுள்ளன.

பின்வாசல் வழியாக..

மதிமுக, மமக, கொமதேக,தவாக, புரட்சி பாரதம் ஆகிய 5 கட்சிகளும் பின்வாசல் வழியாக சட்டப்பேரவைக்குள் நுழைந்துள்ளன.

எனவே, திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள 8 பேரையும்எதிர்க்கட்சி எம்எல்ஏக்களாக கருதக் கூடாது.

அதேபோல, சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத இந்தக் கட்சிகளை, அனைத்துக் கட்சி கூட்டங்களுக்கு அழைக்கக்கூடாது. இவர்களை எதிர்க்கட்சி எம்எல்ஏக்களாக கருதி, பேரவையில் தனி இருக்கையோ, பேசுவதற்கு நேரமோ ஒதுக்கக் கூடாது.

இவ்வாறு மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.