தாம்பரம்: குப்பையில் கிடந்த வைர நகையை மீட்டு மூதாட்டியிடம் ஒப்படைத்த தாம்பரம் மாநகராட்சி தூய்மைப் பணியாளர் கார்மேகத்தை தலைமைச் செயலர் வெ.இறையன்பு அழைத்து பாராட்டி கவுரவித்தார.

தாம்பரம் அடுத்த ராஜகீழ்பாக்கம் ராதேஷியாம் அவென்யூவை சேர்ந்ததவர் ஜானகி (65). மார்ச் 11-ம் தேதி வீட்டில் சேகரமான குப்பையை தாம்பரம் மாநகராட்சி குப்பை வண்டியில் கொட்டினார். சிறிது நேரம் கழித்து அவர் காதில் அணிந்திருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான வைர தோடு மாயமாகி இருந்தது தெரியவந்தது.

குப்பையுடன் சேர்த்து, தெரியாமல் வாகனத்தில் கொட்டியிருக்கலாம் என கருதிய மூதாட்டி குப்பை வாகனத்தை கண்டுபிடித்து, பணியாளர் கார்மேகம் என்பவரிடம் விவரத்தை தெரிவித்தார்.

பாராட்டு: இதையடுத்து வாகனத்தை ஓரமாக நிறுத்தி ஒரு மணி நேரம் தேடி குப்பையில் கிடந்த வைர தோடை கண்டெடுத்து மூதாட்டியிடம் தூய்மைப் பணியாளர் ஒப்படைத்தார். வைர தோடை கண்டெடுத்து கொடுத்த துாய்மை பணியாளர் கார்மேகத்தை மாநகராட்சி சுகாதார அதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டினர்.

இந்நிலையில் தலைமைச்செயலர் வெ.இறையன்பு நேற்று காலை சுகாதார பணியாளர் கார்மேகத்தை, தலைமை செயலகத்துக்கு வரவழைத்து சால்வை அணிவித்து பாராட்டினார். பின்னர் பரிசாக புத்தகத்தை வழங்கினார்.