தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறியுள்ளது என்ற கூற்று தவறானது என, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்து உரையாற்றினார்.

அதன் சிறப்பம்சங்கள்:

* ஏறத்தாழ 2,500 மெகாவாட் மின்சாரத்தை மின் சந்தைகளிலிருந்து வாங்கியே அரசு சமாளிக்கிறது. எனவே, கடந்த சில ஆண்டுகளில் தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறியுள்ளது என்ற கூற்று தவறானது.

* தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் சந்திக்கும் பெரும் நிதி இழப்புகள் முற்றிலும் நிலையற்ற தன்மையை ஏற்படுத்துகின்றன. ஆசிய வளர்ச்சி வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்படவுள்ள சென்னை – கன்னியாகுமரி தொழில் பெருவழித்தடம் மின் துறை முதலீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஆகிய நிறுவனங்களின் மறுசீரமைப்பு விரிவாக ஆய்வு செய்யப்படும். அந்த அறிக்கையின் மீது அரசு விரைந்து செயல்பட்டு மின் வாரியத்தின் கழக நிறுவனங்கள் நொடிந்து போவதிலிருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்கும்.

* அடுத்த 10 ஆண்டுகளில் சொந்த மின் உற்பத்தி நிலையங்களின் வாயிலாக, மாநிலத்தில் 17,980 மெகாவாட் மொத்த மின் உற்பத்தித் திறன் கூடுதலாக சேர்க்கப்படும்.

* வேளாண்மைக்கான இலவச மின்சாரம் மற்றும் வீட்டுக்கான மின்சாரம் வழங்குவதற்கான மானியங்களுக்காகவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இழப்புகளுக்கு நிதி வழங்கவும், 19,872.77 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.